“ஒரு குழந்தையைப் போல அழுதேன்” – ‘காதல் தி கோர்’ படத்துக்கு ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பாராட்டு

சென்னை: “ஒரு குழந்தையைப் போல திரையரங்கில் அழுதேன்” என மம்மூட்டி – ஜோதிகாவின் ‘காதல் தி கோர்’ படத்தை நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி பாராட்டியுள்ளார். மேலும், நடிகை சமந்தாவும் படத்தை புகழ்ந்துள்ளார்.

இது தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி தனது எக்ஸ் தள பக்கத்தில், “மம்மூட்டி என்னைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறார். வலி, தனிமை, பயம், அவர் எடுக்க வேண்டிய முடிவுகளின் கணம் என படத்தின் ஒவ்வொரு பார்வையும் என்னை பாதித்தது. இரண்டாம் பாதியில் வரும் ‘எண்டே தெய்வமே’ காட்சி படத்தின் சிறப்பான பகுதியாக இருந்தது. திரையரங்கில் ஒரு குழந்தையைப் போல அழுதேன். ஜியோ பேபி உங்களின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் எங்களை திரும்பி பார்க்க வைக்கிறது. ஓமணா கதாபாத்திரத்தின் மூலம் நீண்ட நாட்களுக்கு எங்கள் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள் ஜோதிகா. இப்படியான ஒரு படத்தைக் கொடுத்த படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த ஆண்டின் சிறப்பான, அழகான அடர்த்தியான படம். மம்மூட்டி, நீங்கள் தான் என்னுடைய ஹீரோ. இதிலிருந்து என்னால் மீள முடியவில்லை. ஜோதிகா லவ் யூ. ஜியோ பேபி நீங்கள் ஒரு லெஜண்ட்” என பதிவிட்டுள்ளார்.