திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் நேற்று 14 கி.மீ.கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ம் தேதிதொடங்கியது. முக்கிய நிகழ்வாக கடந்த 26-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணியளவில் மகா தீபமும் ஏற்றப்பட்டன.
இந்நிலையில், ‘மலையே மகேசன்’ எனப் போற்றப்படும் 14 கி.மீ. தொலைவு கொண்ட திருவண்ணாமலையை பக்தர்களைப் போன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் நேற்று கிரிவலம் சென்றார். அவருடன், காவல் தெய்வமான துர்க்கை அம்மன் பின்தொடர்ந்து சென்றார்.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கிரிவலம் வந்த சுவாமிகளுக்கு வழியெங்கும் அர்ச்சனை செய்தும், கற்பூர தீபாராதனை காண்பித்தும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடல், பாடலுடன் சிவபக்தர்கள் வரவேற்றனர்.
ஆதி அண்ணாமலையார் கோயில், கவுதம மகரிஷி ஆசிரமம் உள்ளிட்ட இடங்களில் சுவாமிகளுக்கு ஆன்மிக முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல, கிரிவலப் பாதையில் திருக்கோலமிடப்பட்டிருந்தன.
கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் பவுர்ணமியையொட்டி பக்தர்களின் கிரிவலம் கடந்த 26-ம்தேதி அதிகாலை தொடங்கி 3-வதுநாளாக நேற்றும் நீடித்தது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, தெலங்கானா மாநில பக்தர்களும் கிரிவலம் சென்றனர்.
இதற்கிடையில், திருவண்ணாமலை ஐயங்குளத்தில் 2-வது நாளாக நேற்று தெப்ப உற்சவம் நடைபெற்றது. சந்திரசேகரரின் தெப்ப உற்சவத்தை தொடர்ந்து, பராசக்தி அம்மனின் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
இன்று (நவ. 29) வள்ளி, தெய்வானை சமேத முருகரின் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. 17 நாள் கார்த்திகை தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நாளை (நவ. 30) நிறைவு பெறுகிறது.