மும்பை: இந்தி நடிகர் சல்மான் கானுக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்திருப்பதை அடுத்து, ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் குண்டு துளைக்காத காரை பயன்படுத்துகிறார். துப்பாக்கி லைசென்ஸும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனடாவில் வசிக்கும் பஞ்சாப் பாடகர் ஜிப்பி கிரேவால் வீட்டுக்கு வெளியில், சமீபத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இவர், சல்மான் கானுக்கு நெருக்கமானவர் என்றும் சல்மானை எச்சரிக்கவே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகவும் லாரன்ஸ் பிஷ்னோய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சல்மான் கான், தன் நண்பர் இல்லை என்று ஜிப்பி கிரேவால் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சல்மான் கானை மீண்டும் மிரட்டும் விதமாக லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஜிப்பி கிரேவாலுக்கு சமூக வலைதளப் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், ‘ இந்தச் செய்தி சல்மான் கானுக்குத்தான். தாவூத் காப்பாற்றுவான் என்ற மாயையில் இருக்க வேண்டாம். யாராலும் காப்பாற்ற முடியாது. நீங்கள் விரும்பும் எந்த நாட்டுக்கும் தப்பிச் செல்லுங்கள். ஆனால் நினைவில் கொள்ளுங்கள். மரணத்துக்கு விசா தேவையில்லை’ என்று பதிவிடப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தியுள்ள மும்பை போலீஸார் சல்மான் கானுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்