மும்பை: தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டத அடுத்து டீம் இந்தியா சீனியர் வீரர்களை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து படிப்படியாக அகற்றி இளம் வீரர்களை கொண்டு வருவார்கள் என்ற யூகங்கள் பேசப்பட்டு வருகின்றன. அதற்கு பதிலளிக்குமாறு கோலியிடம் இன்னும் எதுவும் தீர்ந்து விடவில்லை. அவரிடம் நிறைய கிரிக்கெட் இருக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் சாதனையையும் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் சாதனையையும் முறியடித்தார் விராட் கோலி. இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா வெள்ளைப்பந்து தொடர்களிலிருந்து விராட் கோலி விடுவிக்கப்பட்டுள்ளார். ரோஹித் ஆடுவாரா இல்லையா என்பது பற்றி தெரியவில்லை. விராட் கோலி டெஸ்ட் போட்டிகளுக்கு வருகிறார். முதல் டெஸ்ட் பாக்சிங் டே அன்று டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், விராட் கோலி பற்றி சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “இந்திய அணிக்கு ஆடும் முன்பே நான் விராட் கோலியின் ஆட்டத்தைப் பார்த்திருக்கிறேன். இளம் வீரராக இருந்ததிலிருந்து அவரை நான் பார்த்து வருகிறேன்.
விராட் கோலி நாட்டுக்காக பல பெரிய சாதனைகளைப் படைத்து வருவதையும் தற்போது பார்த்து வருகிறேன். அவர் சாதனைகள் பல புரிவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, அவரது பயணம் தடைபட வாய்ப்பில்லை என்றே உறுதியாக நம்புகிறேன். அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் திறமைகள் உள்ளன, குவிக்க வேண்டிய ரன்களும் நிறைய உள்ளன. நாட்டுக்காக மேலும் மேலும் சாதனைகள் படைக்க அவரிடம் தீராத வேட்கையும் ஆசையும் இன்னமும் உள்ளது. என்னுடைய சாதனையை சக இந்தியரே முறியடித்து இந்திய அணியிலேயே இருப்பது எனக்கு பெரிய மகிழ்ச்சியளிக்கிறது. நான் எப்போதுமே சொல்வேன் சாதனைகள் இந்தியாவுக்கு உரியது, இப்போதும் இந்திய அணியிடம்தான் உள்ளது.
இப்போது தென் ஆப்பிரிக்கா தொடரிலிருந்து விடுப்பை கோலியே பிசிசிஐ-யிடம் கோரியிருந்தார். அதாவது, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர விரும்பினால் தெரிவிக்க விரும்புகிறேன் என்றும் கோலி கூறியதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போதைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத்தான் பிரதானம் என்று கோலி கூறியதாக தெரிகிறது. உலகக் கோப்பை முடிந்தவுடனேயே லண்டனுக்கு விடுமுறையைக் கழிக்கச் சென்று விட்டார் கோலி.