ராய்ப்பூர்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை வென்றுள்ளது இந்திய அணி. 4-வது போட்டியை இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் தொடரையும் வென்றுள்ளது.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. ஹெட் மற்றும் பிலிப் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ஆஸ்திரேலியா அதிரடியாக ரன் குவித்தது.
இருந்தும் 3-வது ஓவருக்கு பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. ஜோஷ் பிலிப், ஹெட், ஆரோன் ஹார்டி, பென் மெக்டெர்மோட், டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் வெளியேறினர். இதில் ஹெட் 31 ரன்கள் எடுத்திருந்தார். ஷார்ட், 22 ரன்கள் பதிவு செய்தார்.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட், 23 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இந்த தொடரின் கடைசி மற்றும் 5-வது டி20 போட்டி வரும் 3-ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது.
இந்திய அணி சார்பில் அக்சர் படேல், 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். ரவி பிஷ்னோய், 4 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றி இருந்தார். தீபக் சஹார் 2 விக்கெட், ஆவேஷ் கான் 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.