சென்னை: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச, தேசிய மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் 231 பேருக்கு ரூ.5.28 கோடி மதிப்பிலான உயரியஊக்கத்தொகைக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னைகிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்து. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு காசோலைகளை வழங்கினார்.
தொடர்ந்து தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் ரூ.8.25 லட்சம் மதிப்பில் பாரா விளையாட்டு வீரர் ரமேஷுக்கு பந்தய சக்கர நாற்காலியை வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
திறமையான விளையாட்டு வீரர்களுக்கு எந்த வகையிலும், பொருளாதாரம் என்பது ஒரு தடையைஏற்படுத்திவிடக் கூடாது என்னும் நோக்கத்தோடு அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக ஏற்கெனவே பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதைத்தாண்டி உருவாக்கப்பட்ட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் மூலம்பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு, பயணம் மற்றும் தங்குமிடச்செலவு, விசா கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்காக நிதியளித்து வருகிறோம்.
மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளின் திறமையை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஜெர்மனியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் நிதியளித்தோம். நாம் எப்படி எதிர்பார்த்தோமோ, அதேபோல, அவர்கள் அனைவரும் பதக்கங்களுடன் திரும்பி வந்தார்கள். அவர்கள், அடுத்தடுத்தப் போட்டிகளில் சாதிக்கும் வகையில், நாம் மேலும் ஊக்கத்தொகை வழங்கிவருகிறோம். விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு அடையவுள்ள உயரங்கள் இன்னும் அதிகமிருக்கிறது.அதில் உங்களுக்கான பங்களிப்பும் காத்திருக்கிறது. உயரிய ஊக்கத்தொகை பெற்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் அரசுத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சர்வதேச வாலிபால் கூட்டமைப்பு மற்றும் பேஸ்லைன் வென்சர்ஸ் இடையே கிளப் வேர்ல்டு சாம்பியன்ஷிப் 2024 மற்றும் ரூபே பிரைம் வாலிபால் சீசன் 3 போட்டிகளை நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இளைஞர் நலன் மற்றும்விளையாட்டு மேம்பாட்டுத் துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.