பெங்களூரு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயஸ் ஐயர், அரை சதம் பதிவு செய்தார்.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என கைப்பற்றி உள்ளது. இந்த சூழலில் தொடரின் 5-வது போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னிங்ஸை தொடங்கினர். இருந்தும் 10 ஓவர்கள் முடிவில் 61 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாறியது.
ஸ்ரேயஸ் மற்றும் ஜிதேஷ் சர்மா இணைந்து 42 ரன்கள் எடுத்தனர். ஜிதேஷ், 24 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அக்சர் மற்றும் ஸ்ரேய்ஸ் இணைந்து 46 ரன்கள் எடுத்தனர். அக்சர், 31 ரன்களில் வெளியேறினார். ஸ்ரேயஸ் ஐயர், 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது இந்தியா.
ஆஸ்திரேலிய அணி சார்பில் பவுலர்கள் ஜேசன் பெஹ்ரன்டார்ஃப் மற்றும் பென் துவார்ஷஸ் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். ஆரோன் ஹார்டி, நேதன் எல்லீஸ் மற்றும் தன்வீர் சங்கா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். 20 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்தால் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும்.