IND vs AUS | 5-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி: 4-1 என தொடரை வென்றது!

பெங்களூரு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயஸ் ஐயர் 53 ரன்கள், அக்சர் படேல் 31 ரன்கள், ஜிதேஷ் சர்மா 24 ரன்கள் மற்றும் ஜெய்ஸ்வால் 21 ரன்கள் எடுத்திருந்தனர். 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது.

ஜோஷ் பிலிப் மற்றும் டிராவிஸ் ஹெட் இன்னிங்ஸை தொடங்கினர். சீரான இடைவெளியில் இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வெளியேற்றினர். பென் மெக்டெர்மாட், 36 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணியின் பேட்ஸ்மேன்களில் ஹெட் 28 ரன்கள், கேப்டன் மேத்யூ வேட் 22 ரன்கள் எடுத்திருந்தனர்.

இதில் வேட், கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங், அபாரமாக பந்து வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழப்புக்கு ஆஸ்திரேலியா 154 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் 6 ரன்களில் போட்டியை வென்றது இந்தியா.

முகேஷ் சர்மா 3 விக்கெட்கள், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அக்சர் படேல், 1 விக்கெட் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை அக்சர் படேல் வென்றார். தொடர் நாயகன் விருதை ரவி பிஷ்னோய் வென்றிருந்தார். சூர்யகுமார் யாதவ், இந்த தொடரில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி இருந்தார்.