“உதவிக் கொண்டிருப்பவர்களை குறைகூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்” – தங்கர் பச்சான் காட்டம்

சென்னை: மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள் என்று இயக்குநர் தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கைப் பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணியாகும்.

இவ்வேளையில் உச்ச நட்சத்திர திரைப்பட நடிகர்களும், அவரவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்களும் களத்தில் இறங்கி உதவினால் மக்களின் நிலமை விரைவில் சீரடையும். இதை உடனே செய்தால்தான் உங்களை உயர்த்தி விடும். இந்த மக்களுக்கு நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றிக்கடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” இவ்வாறு தங்கர் பச்சான் பதிவிட்டுள்ளார்.

மிக்ஜாம் புயல் தாக்கத்தைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியையும் ஆட்சியாளர்களையும் விமர்சித்து நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், மழைநீர் சேமிப்பு/வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என்பது தெரியவில்லை. வாக்காளர் என்ற முறையில் இதைக் கேட்டுக் கொள்கிறேன். சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து வெளியில் வந்து சரிசெய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார். விஷாலின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே தங்கர் பச்சான் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.