“என்னால் நடக்கவே முடியாமல் போகும் வரை ஐபிஎல் ஆடியே தீருவேன்!” – கிளென் மேக்ஸ்வெல் உற்சாகம்

2023 உலகக் கோப்பை சாம்பியன் அணியான ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரும், ஆர்சிபி அணியின் முக்கிய வீரருமான கிளென் மேக்ஸ்வெல் தன்னால் நடக்கவே முடியாது போகும் வரை ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடிக் கொண்டிருப்பேன் என்று சூளுரைத்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை சாம்பியன்களான ஆஸ்திரேலியா அடுத்த ஆண்டு மே.இ.தீவுகள் மற்றும் யுஎஸ்ஏ-யில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையையும் வெல்ல திட்டமிட்டு வருகிறது. ஐபிஎல் தொடர்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ச்சியாக ஆடி வருவதுதான் இந்திய பிட்ச்கள் பற்றிய ரோகித் சர்மாவுக்கும் தெரியாத புதிர்களை ஆஸ்திரேலியா தெரிந்து வைத்துள்ளது. அதனால்தான் 2023 உலகக் கோப்பையை வென்றது.

2021 டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது. 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றது. கிளென் மேக்ஸ்வெல் உலகக் கோப்பையின் போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 91/7 என்ற நிலையிலிருந்து அதிரடி இரட்டைச் சதம் விளாசி சாதனை படைத்தார். சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் எடுத்த சதம் வீணாகுமாறு ஒரு அதிரடிச் சதத்தை எடுத்து ஆஸ்திரேலியாவின் ஒரே வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்தார்.

இந்நிலையில், ஆர்சிபி அணிக்கு மீண்டும் 2024 ஐபிஎல் தொடரில் ஆடவிருக்கும் கிளென் மேக்ஸ்வெல் கூறியதாவது: “நான் விளையாடும் கடைசி தொடர் எதுவாக இருக்குமென்றால் அது நிச்சயம் ஐபிஎல் தொடராகவே இருக்கும். என்னால் நடக்க முடியாது போகும் வரை நான் ஐபிஎல் தொடர்களில் ஆடவே செய்வேன்.

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் ஐபிஎல் பங்களிப்பு செய்தது போல் வேறு எதுவும் பங்களிப்பு செய்யவில்லை. சந்தித்த மனிதர்கள், பயிற்சியாளர்கள் அனைத்துமே மிகமிகப் பயனுள்ளவை. மேலும் பல சர்வதேச வீரர்களுடன் அளவளாவியது, கிரிக்கெட் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டது என்று ஐபிஎல் ஒரு முழு வாழ்வியலையே எனக்குக் காட்டியுள்ளது.

ஐபிஎல் வாழ்க்கை பாடமாக அமைந்தது. விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ் போன்றோருடன் அளவளாவுவது, அவர்களுடன் ஆடுவது, அவர்களுடன் பேசுவது என்று அனுபவம் நம்மை வளம்பெறச் செய்கிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் நிச்சயம் ஐபிஎல் தொடரில் ஆடி அடுத்த உலகக்கோப்பை டி20 நடைபெறும் மே.இ.தீவுகள் போன்ற அதே பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளுக்கு இந்திய ஐபிஎல் தொடரில் தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள். மே.இ.தீவுகளில் வறண்ட பிட்சில் பந்துகள் சுழலும் என்று எதிர்பார்க்கலாம்.

ஏற்கெனவே இந்த உலகக்கோப்பை முடிந்தவுடனேயே அடுத்த உலகக்கோப்பைக் குறித்து கவனம் செலுத்தத் தொடங்கி விட்டோம். பிக்பாஷ் டி20 லீகும் ஒரு உற்சாகமான சம்மராக இருக்கும் என்று கருதுகிறேன். சரியான காரணங்களுக்காக தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று ஆஸ்திரேலிய அணியில் நம் இடத்துக்கான வாய்ப்புகளை பிரகாசப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கிளென் மேக்ஸ்வெல் கூறினார்.