மிக்ஜாம் புயல் பாதிப்பு – ‘பார்க்கிங்’ பட இயக்குநர், தயாரிப்பாளர், ஹரிஷ் கல்யாண் நிதியுதவி

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக நடிகர் ஹரிஷ் கல்யாண் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மேலும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோரும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்டுள்ளது. இந்தப் புயலால் வட தமிழகம் மட்டுமல்ல, தெற்கு ஆந்திராவும் பெரிய அளவில் சேதங்களை சந்தித்துள்ளது. அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் வழியாக வெள்ள நீர் விரைவாக வடிந்து வருவதாகவும், வெள்ள பாதிப்பு பணிகளில் 75,000 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 866 இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. 4 சதவீத பகுதிகளுக்கு மட்டுமே இன்னும் மின் விநியோகம் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம் நிதி வழங்கி உதவியுள்ளார். இது தொடர்பான கடிதம் மற்றும் காசோலையை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “என்னுடைய சிறு பங்களிப்பு; கைகோர்ப்போம்” என பதிவிட்டுள்ளார். அவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் சினீஷ் ஆகியோர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா ரூ.1 லட்சம் நிதி அளித்துள்ளனர்.