ஹைதராபாத்: சாய் பல்லவி – நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்துக்கான பூஜை இன்று ஹைதாரபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சாய் பல்லவி, ‘இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி” என்று பேசினார்.
நாக சைதன்யா – சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் புதிய படம் ஒன்றுக்காக இணைந்து நடிக்கின்றனர். சந்தூ மொண்டேடி (Chandoo Mondeti) இயக்கும் இப்படத்துக்கு ‘தண்டல்’ (Thandel) என பெயரிடப்பட்டுள்ளது. இவர் தெலுங்கில் ‘ப்ரேமம்’ படத்தை ரீமேக் செய்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் உள்ள அன்னபூரணா ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் தவிர்த்து, நாகார்ஜூனா, வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை சாய் பல்லவி, “2 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. என்னைச் சுற்றி பாசிட்டிவாக உணர்கிறேன். உங்களது ஆதரவும் வாழ்த்துகளும் கிடைக்க வேண்டும். இந்தப் படத்துக்கான நோக்கத்தை சரியான முறையில் உங்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.