ஆன்டிகுவா: 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் ஆந்த்ரே ரஸல் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 சர்வதேச டி20 போட்டிகள் விளையாட வந்துள்ளது. இதில் ஒருநாள் தொடர் நிறைவடைந்துவிட்டது. இந்தத் தொடரை 2-1 என மேற்கு இந்தியத் தீவுகள் அணி வென்று சாதனை படைத்துள்ளது. இதையடுத்து சர்வதேச டி20 தொடர் வரும் 13-ம் தேதி துவங்க உள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கும் டி20 அணியை மேற்கு இந்தியத் தீவுகள் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் ஆந்த்ரே ரஸலும் இடம்பெற்றுள்ளார்.
ரஸல், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 67 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 741 ரன்களும், 112 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2,262 ரன்களும் குவித்துள்ளார் ரஸல்.
மேலும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் முதன்முறையாக மேத்யூ போர்டும் இணைந் துள்ளார். 15 பேர் கொண்ட மேற்கு இந்தியத் தீவுகள் அணி விவரம்: ரோமேன் பாவெல் (கேப்டன்), ஷாய் ஹோப் (துணை கேப்டன்), மேத்யூ போர்ட், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், அகில் ஹொஸைன், அல்சாரி ஜோசப், பிரண்டன் கிங், குடகேஷ் மோதி, நிகோலஸ் பூரன், கைல் மேயர்ஸ், ஆந்த்ரே ரஸல், ரூதர்போர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட்.