லக்னோ: லக்னோவில் நடைபெற்று வந்த சையத் மோடி சர்வதேச சூப்பர் 300 பாட்மிண்டன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இப்போட்டி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டத்தில் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டா ஜோடியும், 3-ம் நிலை ஜோடியான ஜப்பானின் ரின் இவானகா-கீ நிகானிஷி ஜோடியும் மோதின.
இதில் ரின் இவானகா-கீ நிகானிஷி ஜோடி 21-14, 17-21, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டா ஜோடியை வீழ்த்தியது.
இதையடுத்து ஜப்பான் ஜோடி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. உலகத் தரவரிசையில் 32-வது இடத்தில் உள்ள அஸ்வினி-தனிஷா ஜோடி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பாட்மிண்டன் மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடி முன்னேற்றம் கண்டுள்ளது.
சையத் மோடி சர்வதேச சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து வெளியான இரட்டையர் மகளிர் தரவரிசையில் இந்திய ஜோடி 28-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக அஸ்வினி-தனிஷா ஜோடி 32-வது இடத்தில் இருந்தது.