விஷ்ணுவர்தன் படத்தில் ஆபரேஷன் கேக்டஸ் கதையா?

இயக்குநர் விஷ்ணுவர்தன், தமிழில், பட்டியல், பில்லா, ஆரம்பம் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கிலும் இயக்கியுள்ள இவர், இந்தியில் ‘ஷெர்ஷா’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்தப்படம் வரவேற்பைப் பெற்றது. இப்போது, அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகம் படத்தை இயக்கி வருகிறார். இதில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

இதையடுத்து, சல்மான் கான் நடிக்கும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்க இருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. தி புல் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை பற்றிய தகவல் இப்போது கசிந்துள்ளது.

1988-ம் ஆண்டு மாலத்தீவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடந்தது. அப்போதைய அதிபர் மாமூன் அப்துல் கயூனை தாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவர், உதவிகோரியதை அடுத்து, இந்திய ராணுவம் அதிரடியாக அங்கு நுழைந்து நடவடிக்கையில் ஈடுபட்டது. ‘ஆபரேஷன் கேக்டஸ்’ என்று பெயரிடப்பட்ட இந்த வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையை மையப்படுத்தி சல்மான் கான் நடிக்கும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.