நிர்வாண புகைப்படம், காட்டில் சமையல், நூடுல்ஸ் பாக்கெட் – சர்ச்சையில் நடிகர் வித்யூத் ஜம்வால்

இமயமலைக்குச் சென்றுள்ள பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வாலின் நிர்வாண புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு சர்ச்சையும் கிளம்பியுள்ளது.

‘துப்பாக்கி’, ‘பில்லா 2’, ‘அஞ்சான்’ படங்கள் மூலம் தமிழில் கவனம் பெற்றவர் நடிகர் வித்யூத் ஜம்வால். இவர் தனது 43-ஆவது பிறந்தநாளை இமயமலையில் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நிர்வாணமாக இருக்கும் அவரது படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. மேலும், அந்தப் பதிவில் “இமயமலைக்குச் சென்றேன். ஒவ்வொரு வருடமும் 7-10 நாட்கள் தனியாகக் கழிப்பது என் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது” என குறிப்பிட்டு பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், அவர் பகிர்ந்த புகைப்படம் ஒன்றில் காட்டில் தீ மூட்டி, நூடுல்ஸை சமைக்கிறார். அடர்ந்த காட்டுப் பகுதியில் தீ மூட்டுவதும், நூடுல்ஸ் பாக்கெட்டின் ப்ளாஸ்டிக் கவரை அங்கே வீசியிருந்ததும் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு சூழலியல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சூழலியல் ஆர்வலர் ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “நான் வித்யூத் ஜம்வாலின் மிகப் பெரிய ரசிகன் என்பதால் இது என்னை அதிகம் காயப்படுத்துகிறது. முதலில் காட்டுப் பகுதியில் தீ மூட்டுவது இந்திய வனச் சட்டம் 1927-ன் கீழ் குற்றமாகும். இரண்டாவது பாலித்தீன் பைகளில் மேகியை எடுத்துச் செல்வது சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல. மூன்றாவது, உண்மையில் நீங்கள் தனியாகத்தான் சென்றீர்களா?” என பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் வித்யூத் ஜம்வாலின் இந்தச் செயலை விமர்சித்து வருகின்றனர்.