“செப்பு கலந்த தங்கம் அல்ல… மாசற்ற மாணிக்கம்!” – ரஜினிக்கு ஹர்பஜன் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: “செப்பு கலந்து இருக்கும் தங்கம் அல்ல, மாசற்ற மாணிக்கம்” என நடிகர் ரஜினிகாந்த்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது 73-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளையொட்டி திரையுலகினர் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கின் வாழ்த்து ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், “அன்பு தலைவா! நீங்கள் முகநரையை மை கொண்டு மறைக்காதவர்.. அதேபோல் உங்கள் மன அறையை பொய் கொண்டு நிறைக்காதவர். செப்பு கலந்து இருக்கும் தங்கம் அல்ல. மாசற்ற மாணிக்கம்! பிளாக்பஸ்டர் பிறந்தநாள் வாழ்த்துகள். அலப்பறை கிளப்புங்க சார்” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், “பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினிகாந்த். உங்களைப் போலவே இந்த நாளும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.