ஸ்ரேயஸ் ஐயரா, நிதிஷ் ராணா… கேகேஆர் கேப்டன் யார்? – கவுதம் கம்பீர் நுழைவால் சர்ச்சை

கடந்த ஐபிஎல் தொடரில் காயத்தினால் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆட முடியாமல் போனதால் இடது கை அனுபவ அதிரடி வீரர் நிதிஷ் ராணா கேப்டன்சி பொறுப்பை ஏற்றார். இந்நிலையில், கவுதம் கம்பீர் மீண்டும் கேகேஆர் அணியின் நம்பிக்கை அறிவுரையாளராக இணைந்துள்ளதால் மீண்டும் கேப்டன்சி சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மாதம் 19-ம் தேதி துபாயில் ஐபிஎல் ஏலம் நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு அணியும் ரூ.100 கோடி வரை செலவு செய்யலாம், இது கடந்த ஆண்டின் ரூ.95 கோடியிலிருந்து அதிகரிக்கப்பட்ட தொகையாகும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தக்க வைத்துள்ள வீரர்கள்: நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஸ்ரேயஸ் ஐயர், ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.

கேகேஆர் விடுவித்த வீரர்கள்: ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஆர்யா தேசாய், டேவிட் வீஸே, ஷர்துல் தாக்கூர், நாராயண் ஜெகதீசன், மந்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஜான்சன் சார்லஸ். இந்நிலையில் கேகேஆர் அணிக்கு 12 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 4 அயல்நாட்டு வீரர்கள் இடம்பெறுவார்கள். கொல்கத்தா அணியிடம் ரூ.32.7 கோடி உள்ளது.

இந்நிலையில் நிதிஷ் ராணாவுக்கு கவுதம் கம்பீரின் ஆதரவு இருப்பதாக கேகேஆர் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நிதிஷ் ராணாவினால் கொல்கத்தா அணியில் 2024 சீசனுக்கு முன்னதாக கேப்டன்சி விஷயத்தில் சிறு சலசலப்புகள் ஏற்படலாம் என்று தெரிகிறது.

டெல்லியில் இருந்த போதே ராணாவுக்கு கவுதம் கம்பீரின் ஆதரவு இருந்ததால் மீண்டும் தற்போது இந்தப் பேச்சு எழுந்துள்ளது. கம்பீருக்கும் ராணாவுக்கும் சஞ்சய் பரத்வாஜ் என்பவர்தான் கோச். புதுடெல்லியில் எல்.பி.சாஸ்திரி அகாடமியில் கம்பீரும், ராணாவும் நிறைய சேர்ந்து ஆடியிருக்கிறார்கள்.

மேலும் ஸ்ரேயஸ் ஐயரின் ஐபிஎல் வரலாறும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. அவர் காயமடைந்து விடுகிறார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இப்படித்தான் ஸ்ரேயஸ் ஐயர் ஆட முடியாமல் போனதால் ரிஷப் பண்ட்டை கேப்டனாக்கி அவரையே பிறகு தக்க வைத்தது. ஸ்ரேயஸ் கேப்டன்சிக்கு பரிசீலிக்கப்படவில்லை. அதே போல் இப்போதும் நிதிஷ் ராணாவை கேப்டனாகத் தொடரச் செய்து அவருக்குக் கீழ் ஸ்ரேயஸ் ஐயர் ஆடலாம் என்றே தெரிகிறது.