கேபர்ஹா: தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் எடுத்தது இந்தியா. ரிங்கு சிங், தனது முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் அரைசதத்தை பதிவு செய்தார். மழை காரணமாக 19.3 ஓவர்கள் மட்டும் இந்தியா விளையாடி இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் டி20 போட்டி மழையால் டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி கேபர்ஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீசியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷூப்மன் கில், ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பின்னர் திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இணைந்து மினி கூட்டணி அமைத்தனர். திலக் வர்மா, 20 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் மற்றும் ரிங்கு சிங் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சூர்யகுமார் 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை அவர் கடந்துள்ளார். ஜிதேஷ் சர்மா 1 ரன், ஜடேஜா 19 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மறுமுனையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார் ரிங்கு சிங். 19.3 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. ரிங்கு சிங் 39 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் தடைபட்டது. அப்போது ஹாட்-ட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பில் இருந்தார் தென் ஆப்பிரிக்க வீரர் ஜெரால்டு கோட்ஸி. அந்த சூழலில் முதல் இன்னிங்ஸ் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. மழை காரணமாக டிஎல்எஸ் முறையில் டார்கெட் மாற்றி அமைக்கப்பட்டது. 15 ஓவர்களில் 152 ரன்களை எடுத்தால் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.