சென்னையில் முதல்முறையாக டிச.16-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்துடன் பிரம்மாண்டமாக `திருமுறை திருவிழா’!

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்துடன், முதல்முறையாக சென்னையில் திருமுறை திருவிழா வரும் டிச.16-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் 10 சைவ ஆதீனங்கள் பங்கேற்று ஆசி வழங்குகின்றனர்.

இம்பா சமூக அமைப்பின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் திருமுறை திருவிழாவின் நிகழ்ச்சி நிர்வாகிகள் குழு தலைவர் சொ.முத்துக்குமாரசாமி, துணைத் தலைவர் ஜெகதீஷ்கடவுள், நிர்வாகி சு.வாசு, இம்பாஅமைப்பின் ஜோதிடர் செல்வி தாமோதரன் பங்கேற்றனர்.

செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: இம்பா சமூக அமைப்பு மற்றும் ஐபிஎன் வணிக நிறுவனம் சார்பில் அருளாளர்கள் வழங்கிய 12 திருமுறைகளின் பெருமைகளை போற்றிடும் வகையில் ‘திருமுறை திருவிழா’ வரும் டிச.16-ம்தேதி (சனிக்கிழமை) சென்னைநீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது.

இம்பா அமைப்பின் நிறுவனர்ஆர்.அருணாச்சல முதலியார், பொருளாளர் அப்பு ஆர்.சந்திரசேகர் ஆகியோர் முன்னெடுக்கின்றனர்.

இந்தத் திருவிழாவில் சிறப்பு அம்சமாக 108 ஓதுவாமூர்த்திகள் திருமந்திரங்களை ஓத, சைவஆதீனங்கள் வீற்றிருக்க, நால்வர்எழுந்தருள, நடராஜர் திருச்சபையில் மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது.

உலக வரலாற்றில் முதல்முறையாக மதுரைக்கு வெளியே சென்னையில் மிக பிரம்மாண்டமாக திருக்கல்யாண உற்சவம் தமிழக மக்களின் நன்மைக்காகவும், நல்வாழ்வுக்காகவும் நடைபெறுகிறது.மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் எப்படி நடைபெறுமோ, அதேமுறையில் எவ்வித மாற்றமுமின்றி சென்னையிலும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

இந்நிகழ்வில் திருவாடுதுறை, தருமபுரம், மதுரை உட்பட 10 சைவஆதீனங்கள் எழுந்தருளி ஆசிவழங்கவுள்ளனர். சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்கிறார். கூடுதலாக கையிலாய இசையமைக்க 108 கலைஞர்களும் வருகை தருகின்றனர். கன்வென்ஷன் சென்டரில் உள்ள 4 மண்டபங்களில் நடைபெறும் திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். அனைவருக்கும் அனுமதி இலவசம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.