‘Fight club’ Review: அட்டகாசமான ‘மேக்கிங்’ மட்டும் போதுமா?

வட சென்னையில் சிறந்த குத்துச்சண்டை வீரராக வலம் வருகிறார் பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்). தனது ஏரியாவில் உள்ள சிறுவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக மாற்ற வேண்டும் என அவர் ஆசைப்பட, அதற்கு நேர்மாறாக அவரது தம்பி ஜோசப் (அவினாஷ்), கிருபாவுடன்(ஷங்கர் தாஸ்) சேர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்கும் தொழில் நடத்தி வருகின்றார். இதனை பெஞ்சமின் கண்டிக்க, ஜோசப்பும் கிருபாவும் சேர்ந்து அவரை கொன்றுவிடுகின்றனர். இதில் ஜோசப்பை பகடை காயாக பயன்படுத்தி, கிருபா பெரிய அரசியல்வாதியாகிறார். தன்னை ஏமாற்றிய கிருபாவை கொலை செய்ய முடிவெடுக்கும் ஜோசப், நேரடியாக களத்தில் இறங்காமல், ஃபுட்பால் ப்ளேயர் ஆக வேண்டும் என கனவோடு சுற்றித் திரியும் செல்வத்தை (விஜய்குமார்) தூண்டிவிட்டு, அதன் மூலம் காரியம் சாதிக்கப் பார்க்கிறார். இறுதியில் ஜோசப்பின் திட்டம் பலித்ததா? கிருபா கொல்லப்பட்டாரா? செல்வத்தின் எதிர்காலம் என்னவானது? – இதுவே திரைக்கதை.

1999-ம் ஆண்டு வெளியான டேவிட் ஃபின்சரின் கல்ட் க்ளாசிக் என கொண்டாடப்படும் ‘Fight Club’ படத்தின் டைட்டிலை தமிழுக்கு பயன்படுத்தியிருப்பதன் மூலம் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்புகளை படத்தின் அட்டகாசமான மேக்கிங் பூர்த்தி செய்கிறது. இளையராஜாவின் ‘என் ஜோடி மஞ்ச குருவி’ பாடலின் துள்ளலிசையை அத்தனை அழகாக மீட்டுருவாக்கம் செய்தது தொடங்கி விறுவிறுப்பான காட்சிகளுக்கு வித்தியாசமான பின்னணி இசை அமைத்தது வரை படம் முழுவதும் ‘வைப்’ மோடிலே வைத்திருக்கிறார் கோவிந்த் வசந்தா. ராவண மகன், வியூகம், பாடல்கள், ஆக்‌ஷன் காட்சிகளுடன் இணைந்த அறுசுவை விருந்து.

திரையரங்கின் இருட்டறையில் புரொஜக்டர் ஓடிக்கொண்டிருக்க, அதனை இடைமறித்து செல்லும் இடம், ஆங்காங்கே வரும் ஷில்அவுட் ஷாட்ஸ், ‘தளபதி’ படம் ஓடும் திரையரங்கில் வரும் சண்டைக்காட்சி, க்ளைமாக்ஸ் பேனிங் ஷாட்ஸ், ஆட்டோவிலிருந்து 4 பேர் இறங்கும்போது வைக்கப்படும் டாப் ஆங்கிள் ஷாட், அடித்து பிடித்து ஓடிக்கொண்டிருக்க அதே வேகத்தில் நகரும் கேமரா, தெருவிளக்கு ஒளியில் நடக்கும் சண்டைக்காட்சி என ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார் லியோன் பிரிட்டோ. இவர்கள் இருவருடன் சேர்ந்து, படத்தை தரமாக வடிவமைத்ததில் எடிட்டர் கிருபாகரனின் பங்கு அளப்பரியது.

முன்னுக்குப் பின்னான காட்சிகளை நான் லீனியரில் நேர்த்தியாக கோர்த்தது, ஆங்காங்கே வரும் ஷார்ப் கட்ஸ், இரண்டு பேர் கொல்லப்படும் இறுதிக் காட்சியை நேரத்தை கடத்தாமல் பாரலல் எடிட்டிங் மூலம் ஒன்றாக்கியது என படத்துக்கு மற்றொரு தூண் கிருபாகரன். (எல்லாம் ஓகே பாஸ்… ஆனா அந்த லவ் சீன்ல மட்டும் ஏன் சிஸ்டம் ஹேங் ஆகிடுச்சா?) கோவிந்த் வசந்தா – லியோன் பிரிட்டோ – கிருபாகரன் சேர்ந்து படத்தை தரத்தை மெருகேற்றியிருக்கிறார்கள். ஆனால், அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் உணவுப் பண்டத்தில் சுவைதான் அதனை மேற்கொண்டு சாப்பிடுவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்கிறது.

அப்படியாக, படத்தின் தொடக்கம் ஒரு ராவான கேங்ஸ்டர் கதைக்களத்தை உறுதி செய்கிறது. ஆனால், கேங்க்ஸ்டர் கதை என்பது வெறுமே அடிதடி, பழிவாங்கல் என சுருங்குவது சுவாரஸ்யத்தை கூட்டவில்லை. முதல் பாதி முழுவதும் கதை எதை நோக்கி பயணிக்கிறது அதற்கான நோக்கம் என்ன என்பதில் தெளிவில்லை. இதற்கு நடுவே வேண்டுமென்றே திணித்த கண்டதும் காதல் வகையறா சீனும், அதற்கான ஒரு லவ் சாங்கும் தேவையில்லாத புரொடக்‌ஷன் செலவு. அதன் பிறகு அந்த ஹீரோயினை மருந்துக்கு கூட படத்தில் பார்க்க முடியவில்லை. அப்பட்டமான க்ளிஷேவிலிருந்து தமிழ் சினிமா இளம் இயக்குநரும் மீளாத்து ஏனோ?

இயக்குநர் அப்பாஸ் ரஹ்மத்தின் இன்டர்வல் ப்ளாக் இரண்டாம் பாதியின் மீதான நம்பிக்கை கொடுக்கிறது. எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இரண்டாம் பாதி முழுக்க சண்டை… சண்டை…சண்டை.. மீண்டும் சண்டை… இடையில் கொஞ்சம் ரெஸ்ட் அடுத்து மீண்டும்… ஃபைட கிளப் என்ற டைட்டிலுக்கு நியாயம் சேர்க்க இத்தனை சண்டையா? ஒரு கட்டத்தில் உரிய காரணமில்லாத சண்டைக்காட்சிகள் அலுப்புத் தட்டுகின்றன. கிருபாகரன் கதாபாத்திரம் வில்லன் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கப்படுகிறது. ஆனால், அவரின் வில்லத்தனம் எங்கும் வெளிப்படவில்லை.

ஜோசப் கதாபாத்திரத்தை வில்லனாக எடுத்துக்கொண்டாலும் அதற்கான காட்சிகள் அவர் மீது கோபத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக தன் அண்ணனை கொன்றவரை பழிவாங்கும் நியாயத்தை வெளிப்படுத்துகிறது. இறுதியில் மட்டும் அவரை வில்லனாக சித்தரிக்கும் முயற்சி கைக்கொடுக்கிறது. ஓரிடத்தில் விஜய்குமாரின் தரப்புக்கு இழப்பு ஏற்படுகிறது, அது நமக்கு எந்த பாதிப்பையும் கொடுக்கவில்லை. இழப்புக்கள் பாதிப்பை ஏற்படுத்ததால் சண்டைகளை தேமேவென பார்க்க வேண்டியிருக்கிறது. அதில் நம்மை கனெக்ட் செய்யும் எமோஷன்ஸ் மிஸ்ஸிங். இறுதிக் காட்சியில் வரும் கொடூரமான கொலைகள் இதற்கு உதாரணம்.

இரண்டு கொலைகளை செய்துவிட்டு எதுவுமே நடக்காதது போல் அசால்ட்டாக ஃபுட்பால் கோச்சாக தலை நிமிர்ந்து பயிற்சியை தொடங்குவதெல்லாம் காவல்து றையை மறைமுகமாக கலாய்ப்பதில் சேராதா? (லாஜிக்?!) வட சென்னை மக்கள் மீதான பார்வையை மாற்ற போராடிக் கொண்டிருக்கும் வேளையில், போதைப்பொருட்கள் புழக்கம், ரவுடிசம், கொலை என ஸ்டீரியோடைப்பை வலுப்படுத்துவதும், இதனை சமன் செய்ய மறுபுறம் பெயரளவில் பலவீனமான ஃபுட்பால் காட்சிகளை அமைத்திருப்பதும் புதிய தலைமுறை இயக்குநர்களும் இதையே தொடர வேண்டுமா?

பள்ளி, கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் பக்கவா பொருந்திப்போகிறார் விஜய்குமார். தனது கம்பீரமான குரலால் ஆக்ரோஷமான இளைஞராக, சண்டைக்காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். மோனிஷா மோகன் காதல் காட்சிகளுக்கான கேமியோவில் வந்து செல்கிறார். பெஞ்சமி்னாக வரும் கார்த்திகேயன், கிருபாவாக வரும் சங்கர் தாஸ், ஜோசஃப் அவினாஷ், சரவண வேல் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளனர். பெரும்பாலும் புதுமுகங்கள் என்றாலும் கதாபாத்திரத்தை உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு படத்துக்கு பலம்.

மொத்தமாக, அட்டகாசமான மேக்கிங்கில் ஈர்க்கும் திரையனுபவத்தைக் கொடுக்கும் படம், அதன் அழுத்தமில்லாத ஆக்‌ஷன் – திரைக்கதையால் சண்டையை மட்டும் ரிப்பீட் மோடில் பார்க்கும் உணர்வைக் கொடுக்கிறது.