குஜராத் டைட்டன்ஸிலிருந்து மும்பை இந்தியன்ஸுக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியாவுக்கு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது அந்த அணியின் மூத்த வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஹர்திக் பாண்டியாவுக்கு களத்தினுள்ளும் களத்துக்கு வெளியேயும் கடும் சவால்கள் காத்திருப்பதை இந்த அதிருப்திகள் உணர்த்தி வருகின்றன.
5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து தூக்கி விட்டு ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்சிலிருந்து மிகப்பெரிய தொகைக்கு மீண்டும் வாங்கி அவருக்குக் கேப்டன்சியும் அளித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். இதன் பின்னணியில் பெரிய வர்த்தக முடிவுகள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு, அவர் அதில் வெற்றியும் கண்டு வரும் சூழ்நிலையில் தன் ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் தனக்கு முக்கியத்துவம் தராமல் அணியை விட்டு வெளியே சென்று இன்னொரு அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்ற ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அழைத்து கேப்டன்சிப் பொறுப்பை கொடுத்தது பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தன் சமூக ஊடகப் போஸ்ட்டில் ‘உடைந்த இருதயம்’ ஈமோஜியை வெளியிட்டு சூசகமாக தன் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். நியாயமாகப் பார்த்தால் சூர்யகுமாருக்குத்தான் கேப்டன்சி சென்றிருக்க வேண்டும். மேலும் சில போட்டிகளில் இம்பாக்ட் வீரராக ரோகித் சர்மா ஆடிய போது சூர்யகுமார் தான் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகவும் பொறுப்பு வகித்தார். ஏற்கெனவே கேப்டன்சி பொறுப்பை ஆவலுடன் எதிர்நோக்கும் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் ஹர்திக் பாண்டியாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது கடும் அதிருப்தியே. அவர் ‘சில தருணங்களில் மவுனமே சிறந்த பதில்’ என்று பதிவிட்டதும் சூசக ஹர்திக் பாண்டியா மீதான எதிர்ப்பே என்று மும்பை இந்தியன்ஸ் நிர்வாக வட்டார தகவல்கள் கூறுகின்றன.
கேப்டன்சி விவகாரத்தில் இது போன்ற அலட்சியமான முடிவுகளை எடுப்பது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துக்கு புதிதல்ல. 2013-ல் ரிக்கி பாண்டிங்கிடமிருந்து ரோகித் சர்மாவிடம் கேப்டன்சியை அளித்தது. ஆனால் அதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு 4 டைட்டில்களை ரோகித் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் வென்றது. இது போன்ற தனியார் லீகுகளில் கடைப்பிடிக்கப்படும் விழுமியங்கள் தேசிய கிரிக்கெட்டில் கடைப்பிடிக்கப்படும் விழுமியங்களை விட அதிரடியாகவே இருக்கும் என்பது உலகம் முழுதிலுமான தனியார் கிரிக்கெட் மட்டுமல்ல கால்பந்து உள்ளிட்ட அனைத்து தனியார் லீகுகளிலும் நடப்பதுதான்.