ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்ட சாய் சுதர்சன், அரைசதம் பதிவு செய்து அசத்தினார்.
இந்தப் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வான்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி தொடக்கம் முதலே தொடர்ந்து விக்கெட்களை இழந்து வந்தது. அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்கள், ஆவேஷ் கான் 4 விக்கெட்கள் மற்றும் குல்தீப் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி 27.3 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்சன் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். இதில் ருதுராஜ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் 2-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் சாய் சுதர்சன் இணைந்து 111 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஒரே ஓவரில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஸ்ரேயஸ், 52 ரன்களில் வெளியேறினார்.
16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்தியா. சாய் சுதர்சன், 43 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருந்தார். 9 பவுண்டரிகளை அவர் விரட்டி இருந்தார். மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டி வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.