கடந்த ஆண்டு இதே நாளில் (டிச.18) உலகமே மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணியை கண்டு மெஸ்மரித்து நின்றது. அதற்கு காரணம் வலுவான பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா உலகக் கோப்பையை வென்றது தான். இந்நிலையில், இந்த வெற்றி குறித்து இன்ஸ்டாகிராம் தளத்தில் உணர்ச்சி மிகுந்த பதிவை மெஸ்ஸி தற்போது பதிவிட்டுள்ளார்.
“எனது தொழில்முறை கால்பந்தாட்ட வாழ்க்கையின் அழகான 1 வருடம். வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவு இது” என மெஸ்ஸி தனது பதிவில் தெரிவித்துள்ளார். கத்தாரில் உள்ள லுசைல் மைதானத்தில் கடந்த ஆண்டு இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா விளையாடின. ஆட்டம் தொடங்கிய 23 (பெனால்டி) மற்றும் 36-வது நிமிடத்தில் கோல் பதிவிட்டு ஆட்டத்தில் முன்னிலை வகித்தது அர்ஜென்டினா. இதில் முதல் கோலை மெஸ்ஸி ஸ்கோர் செய்தார்.
அதன் பிறகு பிரான்ஸ் அணி முயற்சி மேற்கொண்டது. 80 (பெனால்டி) மற்றும் 81-வது நிமிடத்தில் அடுத்தடுத்து 2 கோல்களை பதிவு செய்து அசத்தினார் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே. 108-வது (பெனால்டி) நிமிடத்தில் பந்தை வலைக்குள் தள்ளி கோல் ஆக்கினார் மெஸ்ஸி. அடுத்த 10-வது நிமிடத்தில் எம்பாப்பே கோல் பதிவிட்டார்.
முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்களை பதிவு செய்திருந்தன. ஆட்டத்தில் முடிவை எட்ட பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது. இதில் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் அர்ஜென்டினா கோல் கீப்பர் மார்டினஸ் பங்கு மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.