ஐபிஎல் கிரிக்கெட்டில் இனி ஓவருக்கு 2 பவுன்சர்கள் வீசலாம்!

பந்துக்கும் மட்டைக்குமான சமமின்மை, இடைவெளி மிகப்பெரிதானதற்குக் காரணம், கிரிக்கெட் ஆட்டம் பேட்டர்களின் ஆட்டமாக மாறியதற்கு காரணம் முதலில் டி20, பிறகு இதன் பண லாப வேட்டை மற்றும் பிற நலன்களை அறிந்த முதலாண்மைவாதிகள் டி20 கிரிக்கெட்டை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு பணபல கிரிக்கெட்டாக மாற்றியது இதனால் டி20 பேட்டர்களின் கிரிக்கெட்டாக மாறிவிட்டது. ஓரளவுக்கு அந்த சமச்சீரின்மையை சரிகட்ட 2024 ஐபிஎல் தொடரிலிருந்து பவுலர்களுக்குச் சாதகமாக ஓவருக்கு 2 பவுன்சர்கள் அனுமதிக்கப்படவுள்ளது.

இந்த மாற்றத்திற்கான வெள்ளோட்டம் 2023-24 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் பார்க்கப்பட்டது. சவுராஷ்ட்ரா இடது கை பவுலர் உனாட்கட் இந்த ஓவருக்கு 2 பவுன்சர்கள் மாற்றத்தை வரவேற்றுள்ளார், “ஓவருக்கு 2 பவுன்சர்கள் பவுலர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பேட்டர்களை விட பவுலர்களுக்கு இது கூடுதல் சாதகம். ஏனெனில் இதுவரையிலான விதிமுறையின் படி நான் ஒரு பவுன்சரை வீசி விட்டால் அடுத்த பவுன்சர் வராது என்று பேட்டர் திட்டவட்டமாக தன் ஷாட்டை முன்கூட்டியே தீர்மானித்து விடுவார், ஆனால் இனி இன்னொரு பவுன்சரும் உண்டு எனும் போது பேட்டர் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது.

பவுன்சர்களில் பலவீனமான பேட்டர்கள் இருக்கும் போது பவுலர்களுக்கான ஒரு ஆயுதமே இந்த புதிய பவுன்சர் ரூல் ஆகும். இது ஒரு சிறிய மாற்றம்தான் ஆனால் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது. மேலும் டெத் ஓவர்களில் பவுலர்களுக்கு யார்க்கர்கள், ஸ்லோயர் ஒன்கள் போக இன்னொரு வாய்ப்பும் கிடைத்துள்ளது. நாம் இரண்டாவது பவுன்சரை வீசவில்லை என்றாலும் பேட்டர் அதை எதிர்பார்த்திருப்பது அவரது ஸ்ட்ரோக் பிளேயை ஓரளவுக்கு முன் கூட்டியே தீர்மானிப்பதை தடுத்து விடுகிறது.” என்கிறார் உனாட்கட்.

2023 ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆன ‘இம்பாக்ட் பிளேயர்’ ரூல் இந்த ஆண்டும் உண்டு. இந்த விதிமுறையை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோம், ஒவ்வொரு அணியும் தங்கள் லெவனோடு சேர்த்து 4 வீரர்களை கூடுதலாகச் சேர்க்கலாம். இந்த நால்வரில் ஒருவரை இம்பாக்ட் வீரராகக் களமிறக்கலாம். ஒரு அணி 4 அயல்நாட்டு வீரர்களை பிளேயிங் லெவனில் அறிவித்தால் கூட ஒரு இந்திய வீரரை இம்பாக்ட் வீரராக இறக்க முடியும். மாறாக 3 அயல்நாட்டு வீரர்களை கொண்ட அணி ஒரு அயல்நாட்டு பிளேயரை இம்பாக்ட் வீரராகக் களமிறக்கலாம்.

இந்த இம்பாக்ட் பிளேயர் விதிமுறையின் மிகப்பெரிய தப்பிதம் என்னவெனில் ஆல்ரவுண்டர்கள் உருவாவதை தடுத்து விடும். இது வெங்கடேஷ் அய்யர், ஷிவம் துபே, விஜய் சங்கர் போன்றோரையும் இளம் ஆல்ரவுண்டர்களையும் பாதிக்கும். ஏனெனில் நீங்கள் ஒரு பியூர் பேட்டரை அணியில் தேர்வு செய்து விட்டு அவருக்குப் பதிலாக இம்பாக்ட் வீரரை ஸ்பெஷலிஸ்ட் பவுலராக இறக்கிக் கொள்ளலாம். ஆகவே ஆல்ரவுண்டர்களை ஒழிக்கும் முறைக்கு இம்பாக்ட் பிளேயர் என்று பெயர் வைத்து பெரிய புதுமை என்று கொண்டாடி வருகிறார்கள்.

ஐபிஎல் போட்டிகள் 2024-ஆம் ஆண்டு மார்ச்சில் தொடங்கி மே மாதம் முடியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் 2024 பொதுத்தேர்தல் அறிவிப்பை ஒட்டி ஐபிஎல் தேதிகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.