தென் ஆப்பிரிக்க மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவை முதலில் பேட் செய்ய பணித்தது. 46.2 ஓவர்களில் 211 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது இந்தியா. 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. விக்கெட் இழப்பின்றி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் 130 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரீசா ஹென்ரிக்ஸ் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து பேட் செய்ய வந்த வான்டர் டூசன் 36 ரன்களில் வெளியேறினார்.
ஜோர்ஸி, 122 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 42.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. இந்த வெற்றியின் மூலம் 1-1 என்ற கணக்கில் இந்த தொடர் சமனில் உள்ளது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.
முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 2-வது பந்திலேயே எல்பிடபள்யூ முறையில் விக்கெட்டானார். சாய் சுதர்ஷன் – திலக் வர்மா இணைந்து 11 ஓவர் வரை விக்கெட் இழப்பில்லாமல் கொண்டு சென்றனர்.
நந்த்ரே பர்கர் வீசிய 12-வது ஓவரில் திலக் வர்மா 10 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த கே.எல்.ராகுல் – சாய் சுதர்சஷனுடன் பாட்னர்ஷிப் அமைக்க இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடி காட்டிய சாய் சுதர்ஷனை, லிசாட் வில்லயம்ஸ் விக்கெட்டாக்கினார். 83 பந்துகளில் 62 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார் சுதர்ஷன். தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்களில் கிளம்பினார். நிலைத்து ஆடிய கே.எல்.ராகுல் 56 ரன்னில் கிளம்ப 36 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 168 ரன்களைச் சேர்ந்திருந்தது. அதன் பின்னர் வந்த வீரர்கள் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர்.
ரிங்கு சிங் 17 ரன்கள், குல்தீப் யாதவ் 1 ரன், அக்சர் படேல் 7, அர்ஷ்தீப் சிங் 18 என சொற்ப ரன்களில் திணறியது இந்திய அணி. 46.2-வது ஓவரில் அவேஷ் கான் 9 ரன்னில் ரன்அவுட்டாக இந்திய அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா தரப்பில், நந்த்ரே பர்கர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், லிசாட் வில்லயம்ஸ், ஏய்டன் மார்க்ரம் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.