ஆண்டாள் திருப்பாவை 4 | மழையால் நீர்நிலைகள் நிரம்பட்டும்..!

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ பார்த்தேறி,

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்

பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்

ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

மேகத்துக்கு அதிபதியான பர்ஜன்யனே! கடல் போன்ற கருணை உள்ளம் படைத்த தலைவனாக விளங்கும் வருண பகவானே! மழைக்கு அண்ணலே! உன்னை எங்கள் இல்லத்து குழந்தையை அழைப்பதுபோல் கண்ணா என்று அழைக்கிறோம். உன்னிடம் எதையும் மறைத்து வைத்துக் கொள்ளாதே. மாய விளையாட்டுகள் காட்ட வேண்டாம்.

எங்களுக்கு மட்டும் மழையை பொழிவிக்காமல், கடலுக்குள் சென்று அனைத்து நீரையும் முகந்து கொண்டு ஆரவாரத்துடன் ஆகாயத்தில் ஏற வேண்டும். காலம் முதலான எல்லாவற்றுக்கும் முழு முதற்காரணனான கண்ணனின் திருமேனி போல் கருத்து அனைத்து இடங்களிலும் மழையை பொழிவிக்க வேண்டும்.

வலிமையான தோள்களை உடைய பத்மநாபனின் கையில் உள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல மின்னலை ஒளிரச் செய்ய வேண்டும். வலம்புரி சங்கு ஒலிப்பதுபோல் இடி ஒலி எழுப்ப வேண்டும். எப்போதுமே வெற்றியை ஈட்டும் திருமாலின் சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் தொடர் அம்புகளைப் போல் தொடர் மழையை பொழிவிக்க வேண்டும். உலகில் நல்லவர்கள் வாழ்வதற்காக இம்மழை உதவட்டும். பயிர்கள் செழித்து, விவசாயிகள் பயன் அடையட்டும். எங்கும் பசுமை நிறைந்து அனைவரது மனதிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும். நாடு அனைத்து வளங்களையும் பெற வேண்டும். அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி, நாங்கள் இந்த மார்கழி மாதத்தில் நீராடி மகிழ அருள்வாயாக என்று அந்த கண்ணனை வேண்டுகிறாள் கோதை நாச்சியார்.