மும்பை: பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுவார் என அவரது தந்தை அமர்தீப் ரனாவத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இதனால் சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு. அண்மையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார் கங்கனா. இதனையடுத்து, அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக பல தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை கங்கனாவின் தந்தை அமர்தீப் ரனாவத் உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “பாஜக சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் கங்கனா ரனாவத் போட்டியிடுவது உண்மைதான். ஆனால், அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும்” என்றார். மேலும், கங்கனாவின் அண்மைக்கால படங்கள் எதுவும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தமிழில் வெளியான ‘சந்திரமுகி 2’, இந்தியில் வெளியான ‘தேஜஸ்’ படங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. அடுத்ததாக, அவர் நடிப்பில் வெளியாக உள்ள ‘எமர்ஜென்சி’ படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.