சாகிரேப்: ஐரோப்பிய ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் மகளிர் பிரிவில் முதல் பரிசை வென்று அசத்தியுள்ளார் 8 வயது சிறுமியான போதனா சிவானந்தன். இவர் இங்கிலாந்தை சேர்ந்தவர்.
இந்த போட்டி குரோஷியா தலைநகர் சாகிரேப் நகரில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற போதனா, 13-க்கு 8.5 புள்ளிகளை பெற்று மகளிர் பிரிவில் சிறந்த போட்டியாளர் என முதல் இடத்தை பிடித்துள்ளார். 13 சுற்றுகள் அடங்கிய பிளிட்ஸ் போட்டியில் அவர் பங்கேற்றார். சுமார் 555 பேர் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். அதில் 48 கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் 50 சர்வதேச மாஸ்டர்கள் பங்கேற்றனர்.
“நான் எப்போதுமே எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். சில நேரங்களில் வெற்றி பெறுவேன், சில நேரங்களில் தோல்வியை தழுவுவேன். இந்த தொடரில் மகளிர் பிரிவில் நான் முதலிடம் பிடித்தது எனக்கு பெரு மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் எதார்த்தமாக செஸ் விளையாட தொடங்கியுள்ளார். அங்கிருந்து இந்த விளையாட்டில் அவரது ஆர்வம் வளர்ந்தது என போதனாவின் தந்தை சிவானந்தன் தெரிவித்துள்ளார். லண்டனின் வடமேற்கு பகுதியில் போதனா வசித்து வருகிறார். அவரது ஆட்டம் குறித்து சீனியர் வீரர்கள் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.