ஷாருக்கானின் ‘டன்கி’ முதல் நாளில் ரூ.30 கோடி வசூல்!

மும்பை: ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டன்கி’ திரைப்படம் முதல் நாளில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, இந்த ஆண்டு வெளியான ஷாருக்கானின் மற்ற படங்களைவிட குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ‘டன்கி’. டாப்ஸி, விக்கி கவுஷல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஷாருக்கானும், ஹிரானியும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்துக்கு பிரிதம் இசையமைத்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று (டிச.21) திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படம் முதல் நாளில் ரூ.30 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான ‘பதான்’ முதல் நாளில் ரூ.57 கோடி வசூலித்தது. அதேபோல அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ முதல் நாளில் ரூ.75 கோடியை வசூலித்து மிரட்டியது. இந்த இரண்டு படங்களும் ரூ.1,000 கோடி வசூலை ஈட்டின. அந்த வகையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாருக்கானின் ‘டன்கி’ குறைவான வசூலையே முதல் நாளில் ஈட்டியுள்ளது. மேலும், அடுத்தடுத்த விடுமுறை நாட்களை முன்னிட்டு படத்தின் வசூல் கூடும் எனத் தெரிகிறது.

‘பதான்’, ‘ஜவான்’ இரண்டு படங்களைப் பொறுத்தவரை அவை இந்தி தவிர்த்து மற்ற தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் ‘டன்கி’ இந்தியில் மட்டுமே வெளியாகியுள்ளது. மேலும், சில திரையரங்குகளில் சப்டைட்டில் பிரச்சினையும் இருப்பதால் உள்ளூர் ரசிகர்கள் பலரும் படத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லை என்பது வசூல் குறைவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.