சென்னை: “சிஎஸ்கே அளித்த இந்த வாய்ப்பால் என்னை நான் மிகவும் அதிர்ஷ்டஷாலியாக உணர்கிறேன்” என்று ஐபிஎல் ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு சென்னை அணியால் வாங்கப்பட்ட நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் நியூஸிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் வீரர் டேரில் மிட்செலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கொடுத்து வாங்கியது. நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் டேரில் மிட்செல். இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனியொருவனாக போராடினார். எனினும், மொகமது ஷமியின் சிறப்பான பந்துவீச்சால் நியூஸிலாந்து அணி வெற்றியை நழுவவிட்டது. இதனையடுத்தே ரூ.14 கொடுத்து டேரில் மிட்செலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.
இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்டுள்ளது குறித்து பேசியுள்ள டேரில் மிட்செல், “ஐபிஎல் ஏலத்தின்போது எனது மகளின் 5-வது பிறந்தநாள். பிறந்தநாள் அன்று எனது மகளுக்கு சிறந்த பரிசை அளித்துள்ளேன். நான் எவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டேன் என்பது என அவளுக்கு புரியவில்லை. ஆனால், இந்த தொகை பல வழிகளில் என் குடும்பத்துக்கு உதவும். என் மகள்கள் வளர்ந்த பிறகு பல விஷயங்களை அவர்கள் அனுபவிக்க உதவும். என்னைப் பொறுத்தவரை இது மிகவும் அருமையான விஷயம். சிஎஸ்கே அளித்த இந்த வாய்ப்பால் என்னை நான் மிகவும் அதிர்ஷ்டஷாலியாக உணர்கிறேன். சென்னை அணிக்காக விளையாடுவதை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.