மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 157 ரன்கள் முன்னிலை பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 43, ஸ்னே ராணா 4 ரன்களுடன் நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஸ்னே ராணா 9 ரன்னில் கார்ட்னர் பந்தில் போல்டானார்.
அபாரமாக விளையாடிய மந்தனா 106 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதன் பின்னர் ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சீராக ரன்கள் குவித்தது. ரிச்சா கோஷ் 104 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 121 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 73 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 0, விக்கெட் கீப்பரான யாஸ்திகா பாட்டியா 1ரன்னில் கார்ட்னர் பந்தில் நடையை கட்டினர்.
8-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய பூஜா வஸ்த்ராகர் நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் தீப்தி சர்மா சீராக ரன்கள் சேர்த்தார். நேற்றைய ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 119 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 376 ரன்கள் குவித்தது. தீப்தி சர்மா 147 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 70ரன்களும், பூஜாவஸ்த்ராகர் 33 ரன்களும் சேர்த்துகளத்தில் இருந்தனர். கைவசம் 3 விக்கெட்கள் இருக்க 157 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.