புதுடெல்லி: சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங்கும் மல்யுத்த விளையாட்டில் இனி ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார். பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிவரும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக வீரேந்தர் சிங் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும் தனது பத்மஸ்ரீ விருதையும் திரும்ப ஒப்படைக்கப் போவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள வீரேந்தர் சிங், “எனது சகோதரியும், தேசத்தின் மகளுமான சாக்ஷி மாலிக்குக்காக எனது பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைக்கிறேன். பிரதமர் மோடி ஜி, உங்களின் மகளும், எனது சகோதரியுமான சாக்ஷி மாலிக்கை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இந்த விவகாரத்தில் தேசத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் தங்களின் முடிவை தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக, அந்த அமைப்பின் முன்னாள் தலைவரும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மல்யுத்த வீராங்கனை சமீபத்தில் சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அறிவித்ததோடு, தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திரும்ப ஒப்படைப்பதாக கூறி, நேற்று இரவு விருதை பிரதமர் இல்லத்தின் வாசலில் வைத்துவிட்டு சென்றார். இந்த இருவரை தொடர்ந்து தற்போது வீரேந்தர் சிங்கும் மல்யுத்த விளையாட்டில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார். வாசிக்க > “பிரதமரே… நான் மல்யுத்தத்தை கைவிடுகிறேன்; பத்மஸ்ரீ விருதையும் திரும்ப ஒப்படைக்கிறேன்” – பஜ்ரங் புனியா
பின்புலம் என்ன? – பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக இந்திய மல்யுத்த வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக முன்னணி வீரரான பஜ்ரங் பூனியாவும் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர், பதவியை இழந்தார். இந்தப் போராட்டத்தின் போது பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என சாக்ஷிஉ மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் ஏற்றுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், பிரிஜ் பூஷண் சரண் சிங் ஆதரவாளரான சஞ்ஜய் சிங் புதிய தலைவராக தேர்வாகி உள்ளது போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 15 நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர்கள் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
‘மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்’ – இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவராக சஞ்ஜய் சிங் தேர்வாகி உள்ள நிலையில், சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், கண்ணீர் மல்க கூறும்போது, “நாங்கள் எங்கள் இதயத்திலிருந்து போராடினோம், ஆனால் பிரிஜ் பூஷனின் வணிக கூட்டாளியும் அவரது நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் சிங் தலைவராக தேர்வாகி உள்ளார். இதனால் நான், மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன். நாங்கள், ஒரு பெண் தலைவராக வரவேண்டும் என விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை” என்றார். வாசிக்க > “பெற்றோர் இனி பிள்ளைகளை விளையாட அனுப்புவார்களா?” – சாக்ஷி விலகலால் விஜேந்தர் சிங் வேதனை