நேப்பியர்: வங்கதேச அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தது நியூஸிலாந்து அணி. எளிதான இலக்கை விரட்டிய வங்கதேச அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியானது 31.4 ஓவர்களில் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக வில் யங் 43 பந்துகளில், 3பவுண்டரிகளுடன் 26 ரன்களும், கேப்டன் டாம் லேதம் 21, ஜோஷ் கிளார்க்சன் 16, ஆதித்யா அசோக் 10 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. வங்கதேச அணி தரப்பில் ஷோரிபுல் இஸ்லாம், தன்ஸிம் ஹசன் ஷகிப், சவுமியா சர்க்கார் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
99 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 15.1 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான சவுமியா சர்க்கார் 4 ரன்களில் காயம் காரணமாக ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான அனாமுல்ஹக் 33 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சேர்த்த நிலையில் ஓ’ரூர்க்கி பந்தில் ஆட்டமிழந்தார். தனது 8-வது அரை சதத்தை கடந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 42 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் லிட்டன் தாஸ் ஒருரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த தோல்வியால் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 17 வெற்றிகளை குவித்த நியூஸிலாந்து அணியின் தொடர் வெற்றிகளுக்கு வங்கதேச அணி முற்றுப்புள்ளி வைத்தது. அதேவேளையில் நியூஸிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியின் முதல் வெற்றியாகவும் இது அமைந்தது. இதற்கு முன்னர் 18 முறை வங்கதேச அணி நியூஸிலாந்தில் தோல்வியை சந்தித்து இருந்தது.
இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த போதிலும் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்ததால் 3 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரைநியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 7விக்கெட்கள் வித்தியாசத்திலும் நியூஸிலாந்து வெற்றி பெற்றிருந்தது.