பெர்த்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஸ்மான் கவாஜா ‘எல்லா உயிர்களும் சமம்’ வாசகம் கொண்ட காலணி அணிந்து விளையாடும் விஷயத்தில் அவருக்கு முழு ஆதரவு தருவதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
உஸ்மான் கவாஜா பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ‘எல்லா உயிர்களும் சமம்’ என்கிற வாசகம் அமைதியை போதிக்கும் புறா புகைப்படத்தையும் கொண்ட காலணியை அணிந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், இச்செயல் விதிமுறைகளுக்கு புறம்பானது எனக் கூறி இதுபோன்ற வாசகங்கள் அணிந்து விளையாட கவாஜாவுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது. ஐசிசி விதிமுறைகளின்படி அரசியல் மற்றும் மதம் சம்பந்தமான வாசகங்கள் வீரரின் சீருடையில் எங்கும் பொறிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால், கவாஜா இதனை ஏற்கவில்லை. அவர் தன் சமூக ஊடகப் பதிவில் தன் எதிர்ப்பைப் பதிவு செய்யும் போது, “சுதந்திரம் மனித உரிமை மேலும் அனைத்து உரிமைகளும் சமமே. இந்த நம்பிக்கையை நான் கைவிடுவதாக இல்லை, உறுதியாக இருக்கிறேன்” என்று பதிவிட்டு ஐசிசி-க்கு சவால் விடுத்துள்ளார்.
இதனிடையே, கவாஜாவுக்கு ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த கம்மின்ஸ் இதுதொடர்பாக பேசுகையில், “கவாஜா, தனது நம்பிக்கையில் வலுவாக நிற்கிறார். அவர் மரியாதையான முறையில் தான் அனைத்து செயல்களையும் செய்கிறார் என நினைக்கிறேன். அவரை நாங்கள் ஆதரிக்கிறோம். அனைத்து உயிர்களும் சமம் எனச் சொல்வது, அவ்வளவு புண்படுத்தும்படியான கருத்து ஒன்றும் இல்லை. இக்கருத்தை பேசுவதற்காக கவாஜா தலைநிமிர்ந்து நடக்கலாம். ஆனால், ஐசிசி சில விதிமுறைகளை வகுத்துள்ளன. எனவே அவர்கள் இதை அங்கீகரிக்கப் போவதில்லை. ஐசிசியின் விதிமுறைகளுக்கு நாம் இணங்கிதான் செல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். வாசிக்க: > ‘எல்லா உயிர்களும் சமம்’ வாசகம்: ஐசிசி ‘தடை’யும், உறுதியான உஸ்மான் கவாஜாவின் சவாலும்!