கூகுள் மேப்ஸில் இந்திய பயனர்கள் முக்கிய பங்களிப்பாளர்களாக உள்ளதாக நிறுவனம் தகவல்

கூகுள் மேப்ஸின் ஆக்டிவ் பயனர்களாக இந்தியாவில் மட்டும் சுமார் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் தான் தங்கள் மேப்ஸ் தளத்தின் முக்கிய பங்களிப்பாளர்கள் எனவும் கூகுள் மேப் எக்ஸ்பீரியன்சஸின் துணை தலைவர் மரியம் கார்த்திகா டேனியல் தெரிவித்துள்ளார்.

ஏதேனும் ஒரு புதிய இடத்திற்கோ அல்லது ஊருக்கோ செல்வதென்றால் பெரும்பாலனவர்கள் இப்போது கூகுள் மேப்ஸ் துணையை நாடுவதுண்டு. லொகேஷனை பகிர்ந்தால் போதும் அட்ரஸ் இல்லா தெருக்களை கூட கூகுள் மேப்ஸ் அறியும் என சொல்லலாம். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் இந்த அப்ளிகேஷன் மிகவும் பிரபலம். இந்தியாவில் தினந்தோறும் கூகுள் மேப்ஸில் 5 கோடிக்கும் மேற்பட்ட இடங்கள் குறித்து பல்வேறு மொழிகளில் சேர்ச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொலைவு சுமார் 2.5 பில்லியன் கிலோ மீட்டர் என சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூகுள் மேப்ஸில் லென்ஸ், லைவ் வியூ, அட்ரஸ் டெஸ்கிரிப்டர், Where is My Train App, எரிபொருள் சிக்கன ரூட் ஆகிய ஐந்து அம்சங்கள் அறிமுகமாகி உள்ளன. படிப்படியாக இந்த அம்சம் வரும் ஜனவரி முதல் பயனர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பயனர்கள் தான் எங்களுக்கு பல்வேறு தகவல்களை நிகழ் நேரத்தில் அளித்து வருகின்றனர். ஸ்டார் ரேட்டிங்ஸ், புகைப்படங்கள், முகவரி மற்றும் சாலையை சரிபார்த்தல், மூடப்பட்டுள்ள சாலை குறித்த அப்டேட் போன்ற விவரங்களை பெறுகிறோம். அந்த வகையில் மேப்ஸில் இந்திய பயனர்கள் முக்கிய பங்களிப்பாளர்களாக உலக அளவில் முன்னணியில் உள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்துள்ளது மேப்ஸ்” என மரியம் தெரிவித்துள்ளார்.