யூடியூபின் வருகைக்குப் பிறகு திரையிசைப் பாடல்களின் தரம் என்பது வியூஸ் அடிப்படையில் கணக்கிடப்படுவது வழக்கமாகிவிட்டது. ஒரு பாடல் மிக சுமாராக இருந்தாலுமே கூட அது 1 மில்லியன் பார்வைகளை பெற்றுவிட்டால் அது ஹிட் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஏராளமான பாடல்கள் வியூஸ்களை வாரிக் குவித்தாலும், யூடியூப் பார்வைகள் என்பதை தாண்டி, சமூக வலைதளங்களிலும் வானொலி சேனல்கள் வாயிலாகவும் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த சில பாடல்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
‘நெஞ்சமே நெஞ்சமே’ – மாமன்னன் – ஏ.ஆர்.ரஹ்மான்: இந்த ஆண்டின் அதிகம் முணுமுணுக்கப்பட்ட பாடல் என்று இந்தப் பாடலை சொல்லலாம். ரீல்ஸ், ஷார்ட்ஸ் என பார்வையாளர்களின் மனதில் திரும்ப திரும்ப திணிக்கப்படாமல், எளிமையான இசையும், பாடல் வரிகளும் இந்த பாடலின் வரவேற்புக்கு காரணமாக அமைந்தன. தேவா, சக்திஸ்ரீ கோபாலன், விஜய் யேசுதாஸ் என மூன்று வெர்ஷன்களுமே மனதை உருகச் செய்யக் கூடியவையாக இருந்தன.
ராசாகண்ணு – மாமன்னன் – ஏ.ஆர்.ரஹ்மான்: அதே ‘மாமன்னன்’ படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடல் இது. வடிவேலுவின் குரலில் இருந்து துக்கமும், ஏக்கமும் இந்தப் பாடலை வேறொரு தளத்துக்கு கொண்டு சென்றது. பெரும்பாலும் ஜாலியான பாடல்களை மட்டுமே பாடிவந்த வடிவேலுவை இப்படியும் பாடவைக்கலாம் என காட்டியிருந்தார் ரஹ்மான்.
வழிநெடுக காட்டுமல்லி – விடுதலை பார்ட் 1 – இளையராஜா: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த ‘விடுதலை பார்ட் 1’ படத்தில் இடம்பெற்ற இப்பாடலை இளையராஜாவே எழுதி பாடியிருந்தார். அதிரடியான பாடல்களுக்கே முன்னுரிமை தரும் 2கே தலைமுறையினரையும் முணுமுணுக்க வைத்து இசையில் என்றைக்குமே தான் ராஜாதான் மீண்டும் ஒருமுறை இந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பின் மூலம் நிரூபித்தார் இளையராஜா.
நான் காலி – குட் நைட் – ஷான் ரோல்டன்: இந்த ஆண்டின் அதிகம் ரீல்ஸ், ஷார்ட்ஸ்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட தமிழ்ப் பாடல் இதுவாக இருக்கலாம். அந்த அளவுக்கு இளம் தலைமுறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றது இந்த பாடல். 80களின் இளையராஜா பாடல்களை ஞாபகப்படுத்தும்படி அமைந்த இந்தப் பாடலை மிகச் சிறப்பாக உருவாக்கி பாடவும் செய்திருந்தார் ஷான் ரோல்டன்.
அகநக – பொன்னியின் செல்வன் 2 – ஏ.ஆர்.ரஹ்மான்: ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்திலேயே இந்த பாடலின் சிறிய துணுக்கு பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதன் முழு வடிவம் இரண்டாம பாகத்தில் இடம்பெற்றிருந்தது. சக்திஸ்ரீ கோபாலனின் மயக்கும் குரலில் த்ரிஷா, கார்த்தி காதல் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் இந்தப் பாடல் கேட்டதுமே நெஞ்சோடு ஒட்டிக் கொள்வதாக இருந்தது.
அமுத கடல் உனக்குதான் – சித்தா – சந்தோஷ் நாராயணன்: ’சித்தா’ படம் வெளியாகி மூன்று மாதங்களை கடந்து விட்டாலும் இந்த பாடலுக்கான மவுசு சமூக வலைதளங்களில் இன்னும் குறையவில்லை எனலாம். விவேக்கின் வரிகளில் சந்தோஷ் நாராயணனின் கரகர குரலில் உருவான இந்தப் பாடல் இந்த ஆண்டின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று. தனது ஆர்ப்பாட்டமில்லாத இசையால் கேட்பவர்களை கிறங்கடித்திருந்தார் சந்தோஷ் நாராயணன். படத்தில் இந்தப் பாடல் மட்டும் சந்தோஷ் நாராயணனுடையது.
கண்கள் ஏதோ – சித்தா- திபு நினன் தாமஸ்: அதே ‘சித்தா’ படத்தில் இடம்பெற்ற காதல் பாடலான இதனை திபு நினன் தாமஸ் இசையமைத்திருந்தார். யுகபாரதியின் வரிகளில் பிரதீப், கார்த்திகாவின் குரலில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல் படத்தில் சித்தார்த், நிமிஷா இடையிலான காதல் உணர்வுகளை மிக அழகிய முறையில் பார்வையாளர்களுக்கு கடத்த உதவியது.
அந்த ஆகாயம் – பத்து தல – ஏ.ஆர்.ரஹ்மான்: சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் சித் ஸ்ரீராமின் குரலில் இடம்பெற்ற இப்பாடல் இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க பாடல்களில் ஒன்று. படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை பார்வையாளர்களுக்கு சொல்ல வைக்கப்பட்ட இப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
நிரா நிரா – டக்கர் – நிவாஸ் கே.பிரசன்னா: கரோனா காலகட்டத்திலேயே பலரின் ரிங்டோனாக இருந்த இந்த பாடல், படம் வெளியானபோதும் கவனிக்கப்பட்டது. சித் ஸ்ரீராமின் பாடிய இப்பாடலில் கவுதம் வாசுதேவ் மேனனும் ஒரு சிறிய பகுதியை பாடியிருப்பார்.
காற்றோடு பட்டம் போல – அயோத்தி – என்.ஆர்.ரகுநாதன்: ‘அயோத்தி’ படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல் இது. படத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் தனது குரல் வழியாக பார்ப்பவர்களுக்கு செலுத்தி உருக வைத்திருப்பார் பாடகர் பிரதீப்குமார். தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் சோகத்தையும், தந்தையின் மனமாற்றத்தையும் தனது வரிகளில் வடித்திருப்பார் பாடலாசிரியர் சாரதி.
நன்றி
Publisher: www.hindutamil.in