‘கண்ணூர் ஸ்குவாட்’ ஸ்டண்ட் மாஸ்டர் ஜாலி பாஸ்டியன் மாரடைப்பால் மரணம்

பெங்களூரு: ‘அங்கமாலி டைரீஸ்’, ‘கண்ணூர் ஸ்குவாட்’ உள்ளிட்ட 900 படங்களுக்கு மேல் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாலி பாஸ்டியன் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 57.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்தவர் ஜாலி பாஸ்டியன் (Jolly Bastian). பெங்களூருவில் வளர்ந்தார். மெக்கானிக்காக தனது வாழ்க்கையை தொடங்கியவர், தென்னிந்திய சினிமாவின் பிரதான சண்டை பயிற்சியாளராக வலம் வந்தார். கடந்த 1987-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘பிரேமலோகா’ படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார்.

குறிப்பாக, ரஜினி நடித்த ‘நாட்டுக்கு நல்லவன்’ (1991), சிம்புவின் ‘தம்’ (2003), ‘பெங்களூர் டேஸ்’ (மலையாளம்), ‘அங்கமாலி டைரீஸ்’, ‘கடுவா’ என இதுவரை 900-க்கும் அதிகமான படங்களில் பணியாற்றியுள்ளார். அண்மையில் வெளியாகி ஹிட்டடித்த மம்மூட்டியின் ‘கண்ணூர் ஸ்குவாட்’ படத்தில் கார் சேஸிங் காட்சியை கோரியோகிராஃப் செய்த விதம் குறித்து படத்தின் எழுத்தாளர் ரோனி டேவிட் புகழ்ந்து பேசியிருந்தார்.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.