புதுடெல்லி: “பஜ்ரங் புனியா மற்றும் பிற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அரசியல் செய்வதற்காக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்கள் தங்களின் சிறந்த நிலையை கடந்து விட்டனர்” என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவரான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட புதிய நிர்வாக அமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த வீரர்கள் (எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்) தங்களின் சிறந்த நிலையை கடந்துவிட்டனர். பஜ்ரங் புனியா தனது கடைசி போட்டியில் 10-0 என்ற கணக்கில் தோற்றார். இப்போது அவர்கள் அரசியலுக்காக மல்யுத்தத்தை கைவிடுகின்றனர். ராகுல் காந்தி அவர்களை சென்று சந்தித்துள்ளார். இது வீரர்களுக்கு நல்லது அல்ல.
இந்த வீரர்கள், இளைய வீரர்கள் முன்னேறுவதை விரும்பவில்லை. அவர்கள் அரசியல் செய்கிறார்கள். ஒரு கட்சியை அல்லது பிற கட்சியை சென்று சந்திக்கிறார்கள். சோதனை போட்டிகள் நடத்தப்படாததால் இளைய வீரர்களுக்கு நிறைய இழப்புகள் ஏற்படுகின்றன. நான் கடந்த 10 -12 வருடங்களாக மல்யுத்தத்துடன் தொடர்பில் இருக்கிறேன். நான் எப்போதாவது ஒரு மல்யுத்த வீரரை அவமரியாதையாக நடத்தி இருந்தால் அவர்கள் ஆதாரத்தைக் காட்டட்டும்.
நான் கூட்டமைப்பின் தலைவராக தேந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டம் தொடங்கியதில் என்னுடைய தவறு என்ன இருக்கிறது. வீரர்கள் பதக்கங்களைத் திருப்பிக் கொடுத்தது அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்திருக்கக் கூடாது. நமது மக்களின் பணமும் உணர்வுகளும் அவர்களை நட்சத்திரங்களாக்கின.
கூட்டமைப்பின் தேர்தலுக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தேர்தல் அதிகாரியாக இருந்தார். இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பில் இருந்து பார்வையாளர்கள் இருந்தனர். தேர்தல் ஜனநாயக முறையில் நடந்தது. இந்தத் தேர்தல் கட்சி சார்பற்றது” என்று தெரிவித்தார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய நிர்வாக அமைப்பை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்த நிலையில், அந்தக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை நிர்வகிக்க தற்காலிக குழு ஒன்றை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்தத் குழுவின் தலைவராக பூபேந்திர சிங் பஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார். எம்.எம்.சவுமியா, மஞ்சுஷா தன்வார் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
முன்னதாக, வீரர்களின் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் பல முறை தள்ளிப்போன இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் டிச.21-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய உதவியாளரான சஞ்சய் சிங், தலைவர் பதவிக்கு போட்டியிட்டு, மொத்தமுள்ள 47 வாக்குகளில் 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் பெரும்பாலான நிர்வாக பதவிகளில் பிரிஜ் பூஷண் அணியினரே வெற்றி பெற்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதற்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகாத் ஆகியோரும் ஆதரவு கொடுத்தனர்.