கன்னி: பிரச்சினைகளை கண்டு அலட்டிக்கொள்ளாத நீங்கள், எதுவாக இருந்தாலும் சந்திக்க ஒருபோதும் தயங்கமாட்டீர்கள். எளிமையான வாழ்க்கையும், எதார்த்தமான பேச்சும் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்கள்.
சுக்ரனும், புதனும் சாதகமான நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியம் பிறக்கும். கோபம் குறையும். செலவுகள் அடுத்தடுத்து வரும். கணவர் ஆதரவாகப் பேசுவார். குடும்பத்தில் சந்தோஷம் வரும். உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் செலவுகள் உங்களை துரத்தும். பயணங்களும், அலைச்சல்களும் அடுத்தடுத்து இருக்கும்.
30.4.2024 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 8-வது வீட்டில் மறைந்திருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும் இருந்தாலும் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். சொந்த-பந்தங்களுக்காக அலைய வேண்டி வரும். கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
1.5.2024 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குருபகவான் அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வருங்காலத்தை மனதில் கொண்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களிடம் கடன் வாங்கி நீண்ட நாள்களாக ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள்.
தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். பாதியில் முடங்கிக் கிடந்த வீடு கட்டும் பணி முழுமையடையும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். பூர்வீக சொத்தை சீரமைப்பீர்கள். தாய்வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாடு பயணம் சாதகமாக அமையும்.
இந்த வருடம் முடிய உங்கள் ராசிக்குள் கேதுவும், 7-ம் வீட்டில் ராகுவும் அமர்கிறார்கள். கேது ராசிக்குள் வருவதால் தலைச் சுற்றல், குமட்டல், நாக்கில் கசப்பு வந்து நீங்கும். சில நேரங்களில் முன்கோபத்தால் எடுத்தெறிந்து பேசுவீர்கள். நேரம் கிடைக்கும் போது யோகா, தியானம் செய்யத் தவறாதீர்கள். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. 7-ம் வீட்டில் ராகு அமர்வதால் கணவன் – மனைவிக்குள் சந்தேகத்தால் அடிக்கடி சண்டை வரும். மனைவிவழி உறவினர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-வது வீட்டிலேயே வலுவாக இருப்பதால் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோ பலம் உங்களுக்கு கிடைக்கும். விஐபிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
வியாபாரிகளே! முடங்கிக் கிடந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். பழைய கடையை புதுப்பித்து விரிவுப்படுத்துவீர்கள். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வாடிக்கை யாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். கூட்டுத் தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள்.
உத்தியோகஸ்தர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உங்களுக்கு இன்னல்கள் கொடுத்த அதிகாரி மாற்றப்படுவார். புதிய அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். இழுபறியாக இருந்த பதவியுயர்வு இப்போது கிடைக்கும். சம்பளம் கூடும். பிப்ரவரி, மார்ச், ஆகஸ்ட் மாதங்களில் பெரிய வாய்ப்புகள் தேடி வரும்.
இந்தப் புத்தாண்டு உங்களின் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதாகவும், அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கி சமூகத்தில் அந்தஸ்தை தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரிலிருந்து 7கிமீ தொலைவில் உள்ள அழிசூரில் அருள்பாலிக்கும் அருளாலீசுவரரை சென்று வணங்குங்கள். ஏழைக் கன்னிப்பெண்ணின் திருமணத்துக்கு உதவுங்கள்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |