2023-க்கு விடை கொடுக்கும் வேளையில், இந்த ஆண்டில் விளையாட்டு உலகில் படைக்கப்பட்ட சாதனைகள் முதல் அரங்கேறிய சர்ச்சை – சோதனைகள் வரை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம். விளையாட்டு களம் என்பது நொடிக்கு நொடி பரபரப்பும், சுவாரஸ்யமான ஆச்சரியங்களும் நிறைந்தது. அந்த வகையில் நடப்பு ஆண்டிலும் துளி அளவும் பஞ்சம் வைக்காமல் இனிதே நிறைவடைந்துள்ளது. சர்வதேச அளவிலான போட்டிகள் முதல் உள்ளூர் அளவிலான போட்டிகள் வரை ஆடுகளத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நிறைய விஷயங்கள் கவனம் பெற்றுள்ளன. கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி என தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் படைக்கப்பட்ட சாதனைகள் மகத்தானவை.
பிரிஜ் பூஷண் VS சாக்ஷி மாலிக் – மல்யுத்தம்: வழக்கமாக விளையாட்டு வீராங்கனைகள் குறித்த திரைப்படங்களில் வரும் ஒன்லைனர் போல தான் பிரிஜ் பூஷண் சரண் சிங் vs சாக்ஷி மாலிக் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் இருந்தது. ஜனவரியில் முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. அவர் பதவி விலக வேண்டுமென்பதை வலியுறுத்தியும், விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் போராட்டம் மேற்கொண்டனர். தொடர்ந்து மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆணையம் அமைத்து இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்தது.
மூன்று மாத காலம் கடந்தும் விசாரணை குறித்த விவரங்கள் வெளியாகாத காரணத்தால் மீண்டும் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் இறங்கினர். அதே நேரத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. நீதிமன்ற தலையீடு காரணமாக டெல்லி போலீஸார் பிரிஜ் பூஷண் மீது வழக்கு பதிவு செய்தனர். மறுபக்கம் மல்யுத்த வீரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்கள் கைது நடவடிக்கைக்கு ஆளாகினர்.
தொடர்ந்து டிசம்பர் மாதம் மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் பிரிஜ் பூஷண் ஆதரவாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து மல்யுத்த விளையாட்டில் இருந்து விலகுவதாக சாக்ஷி அறிவித்தார். பஜ்ரங் புனியா, தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப கொடுத்தார். இந்த சூழலில் புதிதாக தேர்வான மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் இடைநீக்கம் செய்தது. அந்தக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளை நிர்வகிக்க தற்காலிக குழு ஒன்றை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.
சாம்பியன் பட்டம் வென்ற தோனியின் சிஎஸ்கே படை: ஐபிஎல் கிரிக்கெட் என்றதும் அனைவரது நெஞ்சங்களிலும் சட்டென நினைவுக்கு வருவது தோனியும், சிஎஸ்கே அணியும் தான். ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் என்றாலும் இந்த காம்போ ஏற்படுத்திய தாக்கம் அத்தகையது. 2023-ம் ஆண்டில் நடைபெற்ற சீசனில் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். சிஎஸ்கே அணிக்கு தேவையான வெற்றி ரன்களை விளாசி இருந்தார் ஜடேஜா. சென்னை சாம்பியன் பட்டம் வென்றதும் தோனி, ஜடேஜாவை அப்படியே தனது தோளில் சுமந்து கொண்டாடினார்.
குஜராத் அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி ரிசர்வ் தினத்தில் நடைபெற்றது. போட்டியின் போது மைதானத்தில் தேங்கி இருந்த மழை நீரை அகற்றும் பணி சர்ச்சை ஆனது.
2023 ஐபிஎல் சீசன் முழுவதும் சென்னை அணியின் கேப்டன் தோனி செல்லும் இடமெல்லாம் அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் பெறுவதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். தோனி களம் காணும் போது சேப்பாக்கம் மைதானம் ரசிகர்களின் கூக்குரலால் விண்ணை பிளந்தது. 2024 ஐபிஎல் சீசனிலும் தோனி விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உலகக் கோப்பை கால்பந்தாட்ட சர்ச்சை: ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் உலகக் கோப்பைக்கான மகளிர் கால்பந்து போட்டி கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் அணி, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. அந்த அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது ஸ்பெயின் வீராங்கனைகளை அந்நாட்டு கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் கட்டிப்பிடித்து உதட்டில் முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. பல்வேறு நாட்டு கால்பந்து கூட்டமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அந்தச் சம்பவத்துக்கு லூயிஸ் ரூபியேல்ஸ் மன்னிப்புக் கோரினார். அவர் தனது தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகினார். கால்பந்து சார்ந்த பணிகளில் அவர் ஈடுபட மூன்று ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீரஜ் சோப்ரா எனும் மாவீரன்: நடப்பு ஆண்டில் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவுக்கான இறுதிச் சுற்றில் 88.17 தூரத்துக்கு ஈட்டியை எறிந்து தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.
26 வயதான நீரஜ் சோப்ரா, கடந்த 2021-ல் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். 2022-ல் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் முதலிடம் பிடித்து அசத்தினார். இப்போது அவரது இலக்கு பாரிஸ் ஒலிம்பிக் போட்டி.
கம்பீர் VS கோலி: கடந்த ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் லக்னோ அணியை பெங்களூரு அணி வீழ்த்தி இருந்தது. இந்தப் போட்டிக்கு பின்னர் பெங்களூரு வீரர் கோலி மற்றும் லக்னோ அணியின் அப்போதைய ஆலோசகர் கம்பீர் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. அது அப்படியே நேரலையில் ஒளிபரப்பானது. அப்போது எல்எஸ்ஜி வீரர் அமித் மிஸ்ராவும், கோலியுடன் வாக்குவாதம் செய்தார். அதற்கு முன்னதாக கோலியும், நவீன்-உல்-ஹக்கும் ஆட்டத்தின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது அந்த சீசன் முழுவதும் இன்ஸ்டா ஸ்டோரியில் யுத்தமாக நீடித்தது.
இந்த சர்ச்சைக்கு பிறகு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உலகக் கோப்பை லீக் போட்டியில் விளையாடிய போது கோலி மற்றும் நவீன் இடையிலான மனக்கசப்பு முடிவுக்கு வந்தது. ஓய்வு பெற்ற வீரர்கள், வீராங்கனைகள்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து டிகாக் மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
மேத்யூஸ் டைம்டு அவுட் சர்ச்சை: இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விவாத பொருளானது இலங்கை வீரர் மேத்யூஸ் ‘டைம்டு அவுட்’ முறையில் அவுட் என அறிவிக்கப்பட்ட விதம். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்த சம்பவம் அரங்கேறியது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இது நடந்தது.
இந்தப் போட்டியில் இலங்கையின் சீனியர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பேட் செய்ய வந்தார். ஆனால், தான் அணிந்து வந்த ஹெல்மெட் ஸ்ட்ராப் சரியாக இல்லாததால் முதல் பந்தை அவர் எதிர்கொள்ள தாமதமானது. மாற்று ஹெல்மெட் வாங்க அணியின் உதவியை நாடிய அவரால் பேட் செய்ய தயாராக முடியவில்லை. இதையடுத்து, வங்கதேச அணி கேப்டன் அவுட் கேட்டு முறையிட்டதால் ஐசிசியின் விதி எண் 40.1.1 கீழ் டைம்டு அவுட் முறையில் நடுவர் அவுட் கொடுத்தார். இந்த சம்பவத்தின்போது ‘ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ குறித்து விவாதிக்கப்பட்டது.
நிறைவேறாத இந்தியாவின் ஐசிசி கோப்பை கனவு: இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2013-ல் ஐசிசி நடத்திய தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அதன் பிறகு ஐசிசி தொடர்களில் இறுதி மற்றும் அரை இறுதிப் போட்டிகளில் தோல்வியை தழுவி கோப்பை கனவை இழந்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் லீக் போட்டிகள் அனைத்திலும் மற்றும் அரை இறுதியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ரோகித் தலைமையிலான இந்திய அணியின் வெற்றியை எந்த அணியாலும் தடுக்க முடியவில்லை. அதன் காரணமாக இந்திய அணி தோல்வியே தழுவாமல் ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அது கனவாக காற்றில் கரைந்தது. 2023-ல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது 2024 டி20 உலகக் கோப்பை தொடரை வெல்ல இந்தியா டார்கெட் செய்துள்ளது.
பூவுலகில் இருந்து விடைபெற்ற முத்துக்கள்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக், இந்திய கால்பந்தாட்ட ஜாம்பவான் மொகமது ஹபீப், 32 வயதான அமெரிக்க தடகள வீராங்கனை டோரி போவி ஆகியோர் நடப்பு ஆண்டில் உயிரிழந்தனர்.
விராட் கோலியின் 50 சத சாதனை: இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இது அவருக்கு 50-வது சதமாக அமைந்தது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் (49 சதங்கள்) சாதனையை அவர் முறியடித்தார். சதம் விளாசிய விராட் கோலி மைதானத்தில் இருந்தபடி போட்டியை பார்த்துக் கொண்டிருந்த சச்சினை நோக்கி தலை வணங்கினார் மரியாதை செய்தார்.
நடப்பு ஆண்டில் உலகக் கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டியில் விளையாடி சாதனை படைத்தார். ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் இந்தியா பட்டம் வென்றது. அதே போல அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற்ற மகளிர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் இந்தியா பட்டம் வென்றிருந்தது.
செப்டம்பர் – அக்டோபரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்றிருந்தது. கடந்த ஜனவரியில் நடைபெற்ற மகளிர் இளையோர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. டென்னிஸ் வீரர் ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது பெவிலியன் திரும்பிய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை குறிவைத்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என ரசிகர்கள் முழக்கமிடும் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்று சர்ச்சையானது.
நன்றி
Publisher: www.hindutamil.in