IND-W vs AUS-W 2-வது ஒருநாள் போட்டி | 3 ரன்களில் ஆஸி. வெற்றி!

மும்பை: இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 3 ரன்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்தப் போட்டி மும்பை – வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் 2-வது போட்டி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது.

259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. ரிச்சா கோஷ் 96 ரன்கள் எடுத்தார். ஜெமிமா 44 ரன்களும், ஸ்மிருதி 34 ரன்களும் எடுத்தனர். இறுதி வரி பேட் செய்த தீப்தி சர்மா, 36 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது இந்தியா.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், இந்திய அணி 12 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் மூலம் 3 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் வென்றுள்ளது. இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் 2-ம் தேதி நடைபெற உள்ளது.