நேபாள கிரிகெட் வீரர் லாமிச்சேன் மீதான பாலியல் வழக்கில் ஜன.10-ல் தண்டனை: பின்னணி என்ன?

நேபாளம்: நேபாள கிரிக்கெட் வீரர் லாமிச்சேன், 18 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டை காத்மாண்டு நீதிமன்றம் உறுதி செய்தது. இவருக்கான தண்டனையை ஜனவரி 10-ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

இருப்பினும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், சம்பவம் நடந்தபோது மைனர் அல்ல என்றும் கோர்ட் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. முன்னதாக, குற்றச்சாட்டு எழுப்பப்பட்டபோது அந்தப் பெண் மைனர் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து லாமிச்சேன் தரப்பு மேல் முறையீடு செய்யவுள்ளது. லாமிச்சேன் தற்போது ஜாமீனில் இருக்கிறார். தண்டனை காலம் குறித்த தீர்ப்பு வெளியாகும்போது அவருக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் லாமிச்சேன் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து நேபாள கிரிக்கெட் வாரியம் அவரை சஸ்பென்ட் செய்தது. காத்மாண்டு காவல் நிலையத்தில் முதல் முதலாக லாமிச்சேன் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு புகார் பதியப் பெற்றது. காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டபோது லாமிச்சேன் மே.இ.தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிகெட் தொடரில் ஆடிக்கொன்டிருந்தார். புகார் எழுந்ததும் கரீபியன் பிரிமியர் லீக் அவரை விடுவித்தது. காத்மாண்டு விமான நிலையத்தில் வந்திறங்கியபோது அவர் கைது செய்யப்பட்டார். அப்போது, நான் சட்டத்தின் துணையை நாடி குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என்றார் லாமிச்சேன்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் நேபாள கிரிக்கெட் அணியில் லாமிச்சேன் இணைந்தார். ஆனால் அவருக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. கிரிக்கெட் உலகக் கோப்பை இரண்டாம் மட்ட லீகில் முத்தரப்பு தொடரில் நமீபியா, ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிராக ஆடினார் லாமிச்சேன். ஆனால் அவருடன் எந்த வீரரும் கைகுலுக்கவில்லை. இதனையடுத்து அவரை நேபாள அணி தேர்வுக்கு பரிசீலிக்காமல் இருந்தது. பிறகு காயமடைந்த வீரருக்கு மாற்றாக மீண்டும் லாமிச்சேன் தேர்வு செய்யப்பட்டார், அப்போது முதல் நேபாள அணியில் அவர் நீடித்து வருகிறார். ஒரு நாள் உலகக் கோப்பை தகுதிச் சுற்று மற்றும் ஆசியக் கோப்பை அணியிலும் லாமிச்சேன் இருந்தார். இந்நிலையில், ஜனவரி 10ஆம் தேதி அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது. மேல் முறையீடு வாய்ப்பும் அவருக்கு உள்ளது.