சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பாக திரண்ட தனது ரசிகர்களை நோக்கிக் கையசத்து, அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.
‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவரது 170-வது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றனர். அங்கு, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்துக்கு ‘வேட்டையன்’ என பெயரிடப்பட்டது. ரஜினி பிறந்தநாளில் படத் தலைப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் கன்னியாகுமரியில் படப்பிடிப்பில் இருந்த தேமுதிக தலைவரும், நடிகரும், தனது நன்பருமான விஜயகாந்த் மறைவால் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பாக திரண்ட தனது ரசிகர்களை நோக்கிக் கையசத்து, அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.
முன்னதாக, நேற்றிரவு முதல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது போயஸ் கார்டன் வீட்டின் முன் திரண்டுவந்தனர். நள்ளிரவில் கேக் வெட்டி, ’ரஜினிகாந்த் வாழ்க’ என்ற கோஷங்களோடு புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து இன்று (ஜன.1) காலை ரஜினிகாந்த் வீட்டிலிருந்து வெளியேவந்து ரசிகர்களை நோக்கிக் கையசைத்தார், அவர்களை நோக்கி கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வகையில் அவர் ரசிகர்களை நோக்கி கையசைத்ததால் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். பின்னர் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.