பிரபாஸின் ‘சலார்’ 10 நாட்களில் ரூ.625 கோடி வசூல்!

சென்னை: பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சலார்’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.625 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கேஜிஎஃப்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இதில் பிரபாஸ் தவிர்த்து ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் படத்துக்கு இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.22-ம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா முறையில் வெளியானது.

படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.178.7 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிகபட்ச வசூலை குவித்த படம் என்ற பெருமையை ‘சலார்’ பெற்றது. இந்நிலையில், தற்போது படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.625 கோடி வசூல் குவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.