சிட்னி: ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் டேவிட் வார்னர். ஏற்கெனவே பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரே தான் பங்கேற்று விளையாடும் கடைசி டெஸ்ட் தொடர் என அவர் அறிவித்திருந்தார்.
தற்போது ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் கடைசி போட்டி புதன்கிழமை அன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியே வார்னர் பங்கேற்று விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி. 37 வயதான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,695 ரன்கள் எடுத்துள்ளார்.
கடந்த 2009 முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வார்னர் விளையாடி வருகிறார். இதுவரை 161 ஒருநாள் போட்டிகளில் 6,932 ரன்கள் எடுத்துள்ளார். 2015 மற்றும் 2023 உலகக் கோப்பை தொடரை வென்ற அணியில் வார்னர் இடம்பெற்றிருந்தார். நடப்பு ஆண்டில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அணிக்கு தேவைப்பட்டால் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவும் தான் தயார் என தெரிவித்துள்ளார்.
ஃப்ரான்சைஸ் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளதாகவும், குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அணிக்கு தேவை இருந்தால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.