சர்வைவா… காயத்தில் இருந்து மீள தீவிர உடற்பயிற்சியில் ஹர்திக் பாண்டியா – வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்து சமீப காலமாக பல வதந்திகள் வெளிவருகின்றன. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, அத்தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் அவர்.

அதன்பின் எந்தவிதமான கிரிக்கெட் தொடரிலும் பங்கேறவில்லை என்பதால், அவரின் உடற்தகுதி குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இடையில், குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடமாறினாலும், காயம் காரணமாக வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் பாண்டியா பங்கேற்பது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டுவந்தன.

இந்த சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் ஹர்திக் பாண்டியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹர்திக் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவே அது. காயத்தில் இருந்து மீண்டு வரும் ஹர்திக், உடற்தகுதி பெரும்வகையில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, கேப்ஷனாக, “முன்னேற்றம், தினமும்” என்றும் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது.

ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களிலும், அதன்பிறகு டி20 உலகக் கோப்பையும் நடைபெறவிருப்பதை அடுத்து அதற்கு தயாராகும் விதமாக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஹர்திக். இதனையடுத்து அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.