கூட்டத்தை கட்டுப்படுத்த சபரிமலை தரிசன முன்பதிவுகள் குறைப்பு; ஜன.10 முதல் உடனடி பதிவுகளும் ரத்து

குமுளி: சபரிமலையில் மகரவிளக்கு பூஜை காலங்களில் கூட்டங்களை முறைப்படுத்தும் வகையில் வரும் 14,15-ம் தேதிகளில் தரிசன முன்பதிவு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 10-ம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங்கும் ரத்து செய்யப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 30-ம் தேதி மாலை மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரையிலும் பல்வேறு வழிபாடுகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் முன்பதிவுகள் மூலமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பதிவு செய்யாதவர்களுக்கு நிலக்கல்லில் ஸ்பாட்புக்கிங் (உடனடி பதிவு) செய்யப்படுகிறது.

மகரவிளக்கின் உச்ச நிகழ்வாக வரும் 15-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. ஏற்கெனவே மண்டல பூஜையின் போது நெரிசல் ஏற்பட்டதால் ஐயப்ப பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. ஆகவே, மகரவிளக்கு பூஜை காலங்களில் பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், நிறைவான தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யும் வகையிலும் தேவசம்போர்டு சார்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு மூலம் தரிசன வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதனை வரும் 14-ம் தேதி 50 ஆயிரமாகவும், 15-ம் தேதி 40 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்பாட் புக்கிங் வரும்10-ம் தேதியில் இருந்து நிறுத்தப்படுகிறது. தொடர்ந்து 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். 21-ம் தேதி பந்தளம் ராஜ குடும்பத்தினரின் சுவாமி தரிசனத்துக்குப் பிறகு நடை சாத்தப்படும்.

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறுகையில், ”மகரவிளக்குக்கு முன்பாக வரும் பக்தர்கள் ஊருக்கு திரும்பாமல் பல இடங்களிலும் முகாமிட்டு விடுகின்றனர். ஏற்கெனவே முன்பதிவு செய்த பக்தர்களுடன் இவர்களும் மகரஜோதி தரிசனத்தில் இணைந்து கொள்வதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே, முன்பதிவுகள் குறைக்கப்பட்டுள்ளன.

மகரஜோதி தரிசனத்துக்கு முடிந்தவரை முதியவர்களும், குழந்தைகளும் வருவதை தவிர்க்க வேண்டும். பின்பு 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அதிக பக்தர்கள் தரிசனம் செய்ய வாய்ப்பளிக்கப்படும்” என்றார்.