மொகாலி: பஞ்சாப் கிங்ஸ் அணி வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் தனது சொந்த மைதானத்தை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை மொகாலியில் உள்ள பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியம் பஞ்சாப் அணியின் சொந்த மைதானமாக இருந்து வந்தது.
தற்போது பஞ்சாப் மாநிலம் முல்லான் பூரில் மகாராஜா யத்விந்தர் சிங் என்கிற சர்வதேச மைதானம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் சார்பில் ரூ.230 கோடி மதிப்பில் இந்த மைதானம் கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த மைதானத்தை பஞ்சாப் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர்களும் பார்வையிட்டனர். தொடர்ந்து இதனை தங்களது சொந்த மைதானமாக மாற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி மாற்றும் பட்சத்தில் வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் முல்லான் பூர் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது.
முல்லன்பூர் மைதானம் சுமார் 30,000 பேர் அமரக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது. இது மொகாலியில் உள்ள ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தின் இருக்கை எண்ணிக்கையை விட மிக அதிகம். மேலும் ஒரேநேரத்தில் 1800 கார்கள் வரை பார்க்கிங் செய்ய முடியும். மைதானத்தில் 12 ஆடுகளங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வீரர்களுக்காக அதிநவீன டிரஸ்ஸிங் அறைகளும் கட்டப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்தே இந்த மைதானத்தை தங்களது ஹோம் பிட்ச்சாக மாற்ற பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உட்பட 10 அணிகள் விளையாடுகின்றன. சென்னைக்கு அணிக்கு சேப்பாக்கம், மும்பை அணிக்கு வான்கடே மைதானங்கள் போன்று ஒவ்வொரு அணிக்கும் சொந்த மைதானங்கள் உள்ளன. இவற்றில்தான் அந்தந்த அணிகள் விளையாடும் பாதிக்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.