இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத், மகாராணா பிரதாப்பின் வாழ்க்கைக் கதையைத் திரைப்படத்துக்காக உருவாக்கி வருகிறார்.
16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மேவார் என்கிற உதய்பூர் மன்னரான மகாராணா பிரதாப்பின் கதையை இரண்டு காலகட்டங்களில் நடப்பது போல உருவாக்குகிறார். பிளாஷ்பேக் காட்சிகள், 1576 ம் ஆண்டில் அக்பருக்கும் மகாராணாவுக்கும் நடந்த ஹால்டிகாட்டி போருக்கு முந்தைய நிகழ்வுகளாகவும் இன்றைய காலகட்ட கதை, மன்னரின் வழி தோன்றல்களைப் பற்றியதாகவும் அமைய இருக்கிறது. இரண்டாம் பாதி கதை இப்போதைய ராஜஸ்தானில் நடக்கும் என்றும் விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதில் ஒரே நடிகர் இரண்டு வேடங்களிலோ அல்லது வெவ்வேறு நடிகர்களோ நடிக்கலாம் என்றும் தெரிவித்துள்ள விஜயேந்திர பிரசாத், பிரபாஸ், ஹிர்த்திக் ரோஷன் அல்லது ரன்பீர் கபூர் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். கதையை முழுமையாக முடித்த பின் இயக்குநரிடம் கொடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இதை யார் இயக்கப் போகிறார் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.